கடந்த 2019-ம் ஆண்டு ஆரம்பித்த கரோனா பெருந்தொற்று தற்போது வரை மனித இனத்தை அச்சுறுத்தி வருகிறது. மரபணு மாற்றமடைந்து புதுப்புது வடிவெடுக்கும் கரோனா வைரஸின் சமீபத்திய வடிவம்தான் ஒமைக்ரான் வைரஸ். கடுமையான பாதிப்புகளை இந்த வைரஸ் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், 1963-ம் ஆண்டே இத்தாலிய சினிமா ‘ஒமைக்ரான்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இது ஏலியன்களின் கதை. ஏலியன்களுக்கும் ஒமைக்ரான் வைரஸுக்கும் தொடர்புள்ளது. எல்லாம் இலுமினாட்டிகளின் சதி என்றெல்லாம் வதந்திகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.
திடீரென்று இத்திரைப்படம் வெளிச்சத்துக்கு வருவதற்கான காரணம் என்ன?
இதற்குப் பின்னால், மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ஒரு ட்விட்டர் பதிவுதான் காரணம். நேற்று ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பதிவில், “வருங்காலத்தில் கோவிட் வைரஸ்கள் தீய சக்திகளாகவும், அவைகளைத் தோற்கடிக்கும் ஒமைக்ரான் என்ற சூப்பர் ஹீரோ பற்றியும் ஒரு திரைப்படம் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு அவருடைய நண்பர் ஒருவர், ஏற்கெனவே 1963-ம் ஆண்டு ‘ஒமைக்ரான்’ என்ற பெயரில் திரைப்படம் வெளியாகிவிட்டது என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அத்திரைப்படத்தின் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “என்னை முந்திக்கொண்டு யாரோ ஒருவர் ஏற்கெனவே ‘ஒமைக்ரான்’ என்ற பெயரில் திரைப்படத்தை எடுத்துவிட்டார்” என்று பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் இத்திரைப்படத்தின் போஸ்டர் பகிரப்பட்டு, 2021-ம் ஆண்டு பரவும் ஒரு வைரஸின் பெயரை எப்படி முன்கூட்டியே கணித்துப் படம் எடுத்தார்கள்? இது எல்லாம் இலுமினாட்டிகளின் வேலை என்று வதந்திகளைப் பரப்பும்/நம்பும் கும்பல் பரப்ப ஆரம்பித்து விட்டது.
உண்மையில் 1963-ம் ஆண்டு வெளியான ‘ஒமைக்ரான்’ திரைப்படத்தில் வைரஸ் பற்றிய எந்த ஒரு காட்சியும் இல்லை. சயின்ஸ் பிக் ஷன் பின்னணி கொண்ட நகைச்சுவையான இத்திரைப்படத்தில், இறந்துபோன ஒரு தொழிற்சாலை ஊழியரின் உடம்பில் ஊடுருவும் ஒமைக்ரான் என்ற வேற்றுகிரகவாசி அந்த உடலை உயிர்பெறச் செய்யும். அந்த உடலின் வழியாக உலகின் நடப்புகளை அறிந்துகொண்டு, அதன்மூலம் தன் இனத்தாரை உலகின் மீது போர் தொடுக்க உதவுவதே இத்திரைப்படத்தின் கதை.
மேலும், ஒமைக்ரான் என்ற வார்த்தை ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்ட வார்த்தை அல்ல. வானவியல் அறிவியலில், இதற்கு முன்பே நட்சத்திரக் கூட்டம் ஒன்றைக் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.