ஆதாரங்கள் இல்லை; பாலியல் வழக்கிலிருந்து அர்ஜுன் விடுவிப்பு


அர்ஜுன்

தமிழ் சினிமாவில் ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘நிபுணன்’, ‘சோலோ’ போன்ற திரைப்படங்கள் மூலம் நடிகையாக அறியப்பட்டவர் ஸ்ருதி ஹரிஹரன். மேலும் ‘நிலா’, ‘அமெரிக்க மாப்பிள்ளை’ போன்ற சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் ‘விஸ்மையா’ என்ற பெயரிலும் தமிழில் ‘நிபுணன்’ என்ற பெயரிலும் வெளியான திரைப்படத்தில் நடித்தபோது, பிரபல நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 2018-ம் ஆண்டு அர்ஜுன் மீது பொதுவெளியில் புகார் கூறினார் ஸ்ருதி ஹரிஹரன். இதுகுறித்து பெங்களூரு போலீஸிலும் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர். இவ்வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஸ்ருதி ஹரிஹரன்

இந்த வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் ஆன போதிலும், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், அர்ஜுனுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிவந்தனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், சக நடிகர்கள், படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றியவர்கள் யாரும் அர்ஜுனுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று நீதிமன்றத்தில் எந்தவிதமான சாட்சிகளும் இவ்வழக்கில் இல்லையென்று போலீஸார் ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால், நடிகர் அர்ஜுனை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

x