மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்; முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூல்?


‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’

பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. டிச.2-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இத்திரைப்படம், மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என்று பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

‘சுதந்திரத்துக்கு முன்பாக கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் வசித்த குஞ்சாலி மரைக்காயர், வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் படை திரட்டி போரிட்டார்’ என்பது வரலாறு. அதை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பிறகு திரையரங்கங்களில் வெளிவரவுள்ளது.

‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ ட்ரெய்லர்:

கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ரசிகர்களுக்கான அதிக சிறப்புக் காட்சிகள், அதிக ஒருநாள் காட்சிகள், அதிக முன்பதிவு என அனைத்து அம்சங்களிலும் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் மலையாளப் படமும் இதுவே. 5 மொழிகளில் 4,100 திரையரங்குகளில் படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

மலையாள நாளிதழ்களில் வெளியான விளம்பரம்

இத்திரைப்படத்தின் முன்பதிவின் மூலம் மட்டுமே ரூ.100 கோடி வசூலானதாக, மலையாளப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர் படக்குழுவினர். இப்படியொரு சாதனையைச் செய்த முதல் இந்தியத் திரைப்படம் இது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா அல்லது வியாபாரத்தைப் பெருமளவில் காட்டி, மக்களை ஈர்க்கும் உத்தியா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

x