போனிகபூரை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா நீதிமன்றத்தில் மேல்முறையீடு


1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘வாலி’. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டிய இத்திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. தற்போது இத்திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சி செய்துவருகிறார் தயாரிப்பாளர் போனிகபூர்.

‘வாலி’ திரைப்படத்தைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியிடமிருந்து, அத்திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி இந்தியில் தயாரிக்கத் திட்டமிட்டார் போனிகபூர். இந்நிலையில், அது தன்னுடைய கதை, தனது அனுமதியில்லாமல் ரீமேக் செய்யக் கூடாது என எஸ்.ஜே.சூர்யா தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போனிகபூர் ரீமேக் தயாரிப்பு பட வேலைகளைத் தொடங்க அனுமதியளித்தது. தற்போது, அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் ஒரு திரைக்கதையானது அதை எழுதிய இயக்குநருக்குச் சொந்தமா அல்லது தயாரிப்பு செலவுகளை ஏற்றுத் திரைப்படம் என்னும் சொத்தாக உரிமை வைத்திருக்கும் தயாரிப்பாளருக்குச் சொந்தமா என்ற கேள்விக்கு இன்றுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. ‘அந்நியன்’ திரைப்பட இந்தி ரீமேக்கிலும் இதுபோன்ற சிக்கல் எழுந்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா ‘வாலி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.

x