திரும்பவும் முதலில் இருந்தா..? - ‘மாநாடு’ விமர்சனம்


‘மாநாடு’ எனத் தொடங்கி ‘மகா மாநாடு’ என்றாகி மீண்டும் மாநாடாகவே உருவானதோடு, படப்பிடிப்பில் தாமதம், சிம்புவின் சேஞ்ச் ஓவர், இறுதி நிமிட ரிலீஸ் குழப்பம் என மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு இறுதியாக நிகழ்ந்துவிட்டது ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் யுவன் இசையில் படம் எப்படி இருக்கிறது?

டைம் லூப் ஜானர் கதை இது. நாயகனுக்கு ஒரேநாள் திரும்பத் திரும்ப நடந்தால் என்னவாகும், அப்படி நடக்கக் காரணம் என்ன, அதிலிருந்து நாயகன் மீண்டாரா என்பதே ‘மாநாடு’ படத்தின் ஒன் லைன்.

துபாயிலிருந்து நண்பனின் திருமணத்துக்காக, கோவை விமான நிலையம் வழியாக ஊட்டி வருகிறார் நாயகன் அப்துல் காலிக் (சிம்பு). விமானத்தில் நாயகி சீதா லட்சுமியை (கல்யாணி பிரியதர்ஷன்) சந்திக்கிறார். ஒரே திருமணத்துக்கு இருவரும் செல்கிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான். திருமணத்தில் கலந்துகொள்ள நாயகி செல்கிறார். திருமணத்தைத் தடுத்து நிறுத்த நாயகன் செல்கிறார்.

நண்பன் பிரேம்ஜிக்காக கல்யாணப் பெண்ணை அழைத்துவந்து இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்துவைப்பதே சிம்புவின் திட்டம். அதற்கு நடுவே, போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யாவால் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் சிம்பு. மீண்டும் முதலிலிருந்து கதை தொடங்குகிறது. துபாயிலிருந்து நண்பன் திருமணத்துக்கு விமானம் வழியாகக் கோவை வருகிறார். மீண்டும் கல்யாணம், எஸ்.ஜே.சூர்யாவால் சிக்கல். மீண்டும் முதலிலிருந்து கதை தொடங்குகிறது. ரிப்பீட் மோடில் பாட்டுக் கேட்டிருப்போம். ரிப்பீட்டில் ஒரேநாள் மீண்டும் நடந்தால், அதற்கு என்ன காரணம், அதைக் கண்டுபிடித்து நாயகன் சரி செய்தாரா, அடுத்த நாளுக்கு நகர்ந்தாரா என்பதே திரைக்கதை.

ஹாலிவுட்டில் டைம் லூப் ஜானர்களில் எக்கச்சக்கமாகப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. டைம் லூப் என்பதே கற்பனையான விஷயம்தான். இதற்குச் சரியான விளக்கத்தை எந்தப் படமும் கொடுத்ததில்லை. தமிழில் மிகப்பெரிய முயற்சி ‘மாநாடு’. ஏனெனில், டைம் லூப் படங்களுக்கென சில சிக்கல்களும் சவால்களும் இருக்கின்றன. முதல் 10 நிமிடத்தில் சொல்லும் கதையைத்தான், மீண்டும் மீண்டும் படம் முழுவதும் சொல்ல வேண்டும். ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆடியன்ஸுக்கு எளிதில் சலிப்புத் தட்டிவிடும். அப்படியான எந்த அசம்பாவிதமும் நடக்காமல் முழுப் படத்தையும் திரைக்கதையில் நகர்த்த வேண்டும். அப்படியான ஒரு சிக்கலான திரைக்கதையைக் கையிலெடுத்து, எளிமையாகக் காட்சிப்படுத்தி, புரியும்விதமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

2010-ல் சிம்புவுக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பெரிய பிரேக். அதுபோல, 2011-ல் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ‘மங்காத்தா’ பெரிய ஹிட். இருவருக்குமே, அதன்பிறகு மிகப்பெரிய ஹிட்டென எந்தப் படங்களும் இல்லை. அந்தப் பொறுப்புணர்வு இந்தப் படத்தில் தெரிகிறது. வித்தியாசமான முயற்சி, இருப்பினும் ரசிகர்களுக்கான கதையுடன் வந்திருக்கிறார் வெங்கட்பிரபு. அதுபோல, சிம்புவும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரின் மீட்டருக்குகீழ் நடித்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக, பிரேம்ஜியை காமெடி செய்யவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது படக்குழு. இப்படி, நிகழ்ந்துவிட்ட பல அற்புதங்கள் மாநாட்டில் இருக்கின்றன. மகிழ்ச்சி !

சிம்புவுக்கு இணையான ரோலில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. முதல் பாதியைச் சிம்பு ஆக்கிரமித்ததால், 2-ம் பாதியில் சரவெடியாகத் தெறிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அறிமுகக் காட்சியாகட்டும், ஒவ்வொரு முறை டைம் லூப்பாகி எழும்போதும் காட்டும் ரியாக்‌ஷன், சிம்புவை மிரட்டுமிடம் என அவரின் சிக்னேச்சர் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கதாநாயகனுக்கு மேலாக வில்லனுக்குத் திரைக்கதையில் இடம் கொடுத்திருப்பது படத்தின் ப்ளஸ்.

வழக்கமான தமிழ் சினிமா நாயகியாக வராமல், கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். அதோடு, சிம்புவின் நண்பர்களாக ப்ரேம்ஜி, கருணாகரன் துணைக் கதாபாத்திரங்களாக டேனியல், மனோ பாரதிராஜா, அரவிந்த் ஆகாஷ், அரசியல்வாதிகளாக எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரா என சீனியர்களும் ஜூனியர் நடிகர்களும் கலந்துகட்டி நடித்திருக்கிறார்கள்.

ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் காட்டுவதால் ரசிகர்கள் கடுப்பாகிவிடக்கூடாதென, ஒவ்வொரு முறை டைம் லூப்பாகும் போதும் புதுக் காட்சிகளையும், சம்பவங்களையும் இணைத்திருப்பது திரைக்கதையின் ப்ளஸ். இந்தப் படத்தில் சவாலான விஷயம் எடிட்டிங் தான். கொஞ்சம் சொதப்பினாலும் அவ்வளவு தான். டைம் லூப் என்றால் என்ன என்பதை எடிட்டிங்கில் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் பிரவீன் கே.எல். கூடவே, ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும் சிறப்பு.

ஒரு பாட்டு மட்டுமே படத்தில் இடம் பெறுகிறது. அதையும் டைம் லூப்பில் வேறு வேறு காட்சிகளாகக் காட்டி ரசிக்க வைத்துவிட்டார்கள். பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் யுவன். எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று யோசிக்க வைத்தாலும், கதைக்குள் கச்சிதமாக நிறைகிறது இசை.

‘க்ரவுன்ட்ஹாக் டே’, ‘ஹேப்பி டெத் டே’, ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’, ‘டெனட்’ எனப் பல ஹாலிவுட் திரைப்படங்களின் பெயரைப் படத்தில் ரெஃபரென்ஸாகக் கூறி, நம் ஊருக்கு ஏற்ப மசாலா சேர்த்திருப்பது வெங்கட் பிரபுவின் புத்திசாலித்தனம். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. லாஜிக் மீறலாக நிறைய இடங்கள் தென்பட்டாலும் காமெடியிலும், வசனங்களிலும் அதையெல்லாம் மறக்கடிக்கச் செய்கிறார் வெங்கட்.

எஸ்.ஜே.சூர்யா ஒரு காட்சியில் ‘உன்கிட்ட என்ன சொன்னேன்’ என்பார். அதற்கு, சிம்பு ‘திரும்பி வரக்கூடாதுன்னு சொன்னீங்க’ என்பார். இது, கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடியின் நாஸ்டாலஜிக் நினைவாக இடம் பெற்றதாகத் தெரிகிறது.

‘சிறுபான்மையினர்கள் என்றாலே தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்ற சமூகப் பிரச்சினையை அப்துல் காலிக் கொண்டு பேசியிருப்பது, அப்பாவுக்குப் பிறகு அவரின் மகன் தலைவராவது, ஹாஸ்பிடலில் வைத்துக் கொலை செய்வது எனப் பல அரசியல் சார்ந்த காட்சிகள் வசனங்களாக இடம் பெற்றிருப்பது ரசிக்கவைக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு புதுமையான முயற்சி. முதல் ஓவரிலேயே சிக்ஸர் விளாசி இருக்கிறார்கள். ஹீரோவுக்கென அதிரடி வசனங்கள் இல்லை, ரொமான்டிக் பாடல்கள் இல்லை, அதிரடி சண்டைக் காட்சிகள் இல்லை. சென்டிமென்ட் இல்லை. இருப்பினும், செம ஜாலியான, நம்மைக் கொண்டாட வைக்கும் படமாக ‘மாநாடு’ நிறைகிறது.

x