‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’ இந்தியாவில் டிச.16 ரிலீஸ்


டோபி மேக்யூர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், டாம் ஹாலண்ட்

மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த வெளியீடான ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ திரைப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்பைடர் மேன் திரைப்பட வரிசையில் 2002-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்பைடர் மேன் -1’ திரைப்படத்திலிருந்து தற்போதுவரை வந்துள்ள 7 திரைப்படங்களில் இதுவரை டோபி மேக்யூர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், டாம் ஹாலண்ட் ஆகிய மூவர் நடித்துள்ளனர். தற்போது நடப்பில் இருக்கும் ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் ஆவார். இந்நிலையில், தற்போது வெளிவரவுள்ள ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ திரைப்படத்தில், இதுவரை வந்த அனைத்து ஸ்பைடர்மேன் திரைப்படங்களின் வில்லன்கள் இடம்பெற உள்ளனர். மார்வெல் கதைகளைப் பொறுத்தவரை, தற்போது வரை இருக்கும் 3 ஸ்பைடர்மேன் கதாநாயகர்களும் ஒரே ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தைக் குறிப்பவர்கள் அல்ல. இந்த 3 பேரும் வெவ்வேறு பிரபஞ்சத்தில் வாழ்ந்துவருபவர்கள்.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மூலம் கால சக்கரத்தில் ஏற்படும் விபத்துமூலம் இந்த 3 பிரபஞ்சங்களும் ஒன்றாகச் சங்கமித்து, வெவ்வேறு பிரபஞ்சத்தில் உள்ள வில்லன்கள் டாம் ஹாலண்ட் நடிக்கும் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தைப் பழிவாங்கவருவதுதான் இத்திரைப்படத்தின் கதைக்களம். 3 பிரபஞ்சத்திலிருந்தும் வில்லன்கள் வருகிறார்கள். ஆனால், 3 ஸ்பைடர்மேன்களும் வருவார்களா என்ற கேள்விக்கு இதுவரை விடையளிக்காமல் புதிராக வைத்திருக்கிறது மார்வெல் நிறுவனம்.

டோபி மேக்யூர்

திரையில் ஒரே நேரத்தில் 3 ஸ்பைடர்மேன்களின் சாகசங்களைப் பார்த்துவிடமாட்டோமா என்று உலக காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலில் இருக்கிறார்கள். இதற்கான விடையை இந்திய ரசிகர்கள் மற்றவர்களைவிட முன்னமே தெரிந்துகொள்ளவிருக்கிறார்கள். இத்திரைப்படம் அமெரிக்காவில் டிச.17-ல் வெளியாகவுள்ளது. ஆனால், இந்தியாவில் ஒருநாள் முன்னதாகவே டிச.16-ல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.

ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்

இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைடர்மேன் படங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதி தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இத்திரைப்படத்துக்கானஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானதும், ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனில் பதிவு செய்ய முயன்றதால், பல பிரபல டிக்கெட் பதிவு இணையதளங்கள் முடங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவஞ்சர்ஸ் என்ட்கேம்’ திரைப்படம் வெளியானபோதும், இதேபோல் ஆன்லைன் முன்பதிவு தளங்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

x