பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நாயகியான பூஜா ஹெக்டேவை விட, உடன் நடிக்கும் அபர்ணா தாஸ் விஜய் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறார்.
பீஸ்ட் திரைப்படத்துக்கான 100-வது நாள் படப்பிடிப்பை கொண்டாடும் வகையில் நேற்று மாலை, படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். இது விஜய் ரசிகர்களுக்கு அப்பாலும், சினிமா விரும்பிகளால் பரவலாக ரசிக்கப்பட்டது. மேலும், பீஸ்ட் திரைப்படத்துக்கான விஜய்யின் புதிய தோற்றம் உள்ளிட்ட பல அம்சங்கள் சிலாகிக்கப்பட்டன.
இதில் விஜய்க்கு அடுத்தபடியாக ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் அபர்ணா தாஸ். நெல்சன் பகிர்ந்த புகைப்படத்தில், நடிகர் கிங்ஸ்லி அருகே கீபோர்ட் வாசிக்கும் பெண்ணாக தோற்றமளிக்கும் பெண் குறித்த தேடல்கள், பகிரல்கள் தொடர்ந்து இணையத்தில் அதிகரித்தன.
‘டிக் டாக்’ மூலம் பிரபலமான அபர்ணா தாஸ், மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே என்றபோதும், இதில் அபர்ணாவுக்கும் முக்கிய தோற்றம் உண்டு.
அபர்ணாவுக்கு முன்பாக அந்த வேடத்தில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் பால்யத் தோழியும் பாலிவுட் நடிகையுமான அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் பரிசீலிக்கப்பட்டனர். பீஸ்ட் திரைப்படத்தில் 2-வது நாயகி அல்லது பிரதான குணச்சித்திர வேடத்தில் அபர்ணா தாஸ் தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது நெல்சன் வெளியிட்ட 100-வது நாள் புகைப்படத்தை அடுத்து, விஜய் ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவை விட அதிக வரவேற்புக்குள்ளான நடிகையாக அபர்ணா தாஸ் மாறியுள்ளார்.