சமூக வலைதளங்களில், அவ்வப்போது எதாவது ஒரு சேலஞ்ச் சவாலாகி ட்ரெண்ட் அடிப்பது வழக்கம். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், மேனிக்யூன் சேலஞ்ச், ரைஸ் பக்கெட் சேலஞ்ச், பாட்டில் கேப் சேலஞ்ச் போன்ற சேலஞ்சுகளின் வரிசையில், சமீபத்தில் சேர்ந்திருப்பது ‘க்ரீன் இந்தியா சேலஞ்ச்’.
ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பிரபலங்கள் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்கிற பெயரில், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். திரையுலக பிரபலங்களைப் பொறுத்தவரை, தங்களது பிறந்தநாளிலோ அல்லது தங்களது படங்கள் ரிலீசாகும் சமயத்திலோ இதுபோன்று மரக்கன்றுகள் நட்டு தங்களது சக நடிகர் நடிகைகளுக்குச் சவால் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டேவும், இந்த மரம் நடும் சவாலைச் செய்து முடித்துள்ளார்.
தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவுடைய உறவினருமான சுஷாந்த் என்பவர் விடுத்த கிரீன் இந்தியா சவாலைத்தான் பூஜா ஹெக்டே நிறைவேற்றியுள்ளார்.
சினிமா நட்சத்திரங்கள் மூலம் பொதுமக்களிடம் குறிப்பாக அவர்களது ரசிகர்களிடம் இப்படி மரம் நடும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊக்கப்படுத்தித் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர் ஆந்திர மாநில எம்.பி, சந்தோஷ்குமார். பூஜா ஹெக்டேவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், "நீங்கள் இன்று செய்ததைப் பார்த்து உங்களது ரசிகர்களும் இந்தியாவின் சிறந்த எதிர்காலத்துக்காக இதுபோன்ற நல்ல விஷயங்களை அப்படியே செய்வார்கள் என நம்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.