விபத்துக்குப் பின் வெளியே வரும் யாஷிகா ஆனந்த்!


‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘ஜாம்பி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மாமல்லபுரத்திலிருந்து தனது நண்பர்களுடன் காரில் சென்னை வந்துகொண்டிருந்த போது, சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா ஆனந்த், அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். மீண்டும் எழுந்து நடக்கத் தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அடிக்கடி தன்னுடைய உடல் நிலை குறித்துத் தொடர்ந்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த். அந்த வகையில் விபத்துக்குப் பின் முதன்முறையாக எழுந்து நடந்த காணொலி ஒன்றைப் பதிவிட்டு, 5 நாட்களுக்கு முன் குழந்தைபோல் முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், யாஷிகா சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார். 4 மாதங்கள் கழித்து வெளியில் வந்துள்ளதாக யாஷிகா ஆனந்த் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். ஊன்றுகோல் உதவியுடன் அவர் படிக்கட்டுகளில் சிரமப்பட்டு ஏறி வரும் காணொலிகள் வைரல் ஆகி வருகின்றன.

x