இந்திய சினிமாவில் பல மொழித் திரைப்படங்களில் நடன வடிவமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் சிவசங்கர். இவர், தற்போது கரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் நடனம் வடிவமைத்த பல திரைப்படங்களுக்காகத் தமிழ்நாடு அரசின் சிறந்த நடன வடிவமைப்பாளர் திரைப்பட விருதைப் பெற்றவர் சிவசங்கர். குறிப்பாக, 2009-ம் ஆண்டு ராஜமௌலியின் இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்த ‘மகதீரா’ திரைப்படத்தின் ‘தீரா..தீரா’ பாடலுக்கு இவர் வடிவமைத்த அதிவேகமான நடனத்துக்காகச் சிறந்த நடன வடிவமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத ‘மன்மத ராசா’ பாடலின் நடனமும் சிவசங்கர் உருவாக்கியதுதான். மேலும், பல திரைப்படங்களில் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் சிவசங்கர்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிவசங்கரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், மருத்துவமனையில் செலவுகளைச் சமாளிக்கமுடியாமல் அவரது குடும்பத்தார் தவித்துவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.