வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‛மாநாடு’. கடந்த தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால் ரஜியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் அதிகமான திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டதால், ‘மாநாடு’ திரைப்படம் அப்போது வெளியாகவில்லை. மாறாக நவ.25(இன்று) வெளியாகும் என அறிவித்திருந்தனர். திரையரங்கங்களுக்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.
இந்நிலையில், கடைசி நேரத்தில் இந்தப் படம் தள்ளிப்போவதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். ‛‛நிறையக் கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என ட்விட்டரில் வெளியிட்டார்.
சிம்புவின் முந்தையப் படங்களைக் காட்டிலும் இந்தப் படத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது என்பதை, மாநாடு படத்தின் முன்பதிவிலேயே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் படத்தை வெளியிடப் பல தரப்பினர் பேசி வந்தனர்.
இறுதியாக உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு பிரச்சினையைச் சுமுகமாக முடித்து வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.