இந்தியத் திரைப்பட நடிகைகளில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருபவர் சமந்தா. தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் பிரிந்த பின்பு அடுத்தடுத்து பட வாய்ப்புகள், கோவா திரைப்பட விழாவில் சிறப்புப் பேச்சாளர், ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஒரு கிளாமர் பாடலுக்கு நடனம் என்று லைம் லைட் வெளிச்சத்தில் தொடர்ந்து இருந்துவருகிறார்.
இந்நிலையில், ‘தி ஃபேமிலிமேன்’ வெப் சீரிஸை இயக்கிய இரட்டை இயக்குநர்களான டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள, புதிய வெப் தொடர் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் உருவான ‘தி ஃபேமிலி மேன் - 2’ தொடரின் மூலம்தான் சமந்தா பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.
இத்தொடருக்குத் தமிழ் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்திய அளவில் சமந்தாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் ‘தி ஃபேமிலிமேன் -2’ தொடர், 12 பிரிவுகளில் இந்த ஆண்டு பிலிம்ஃபேர் விருதுக்குத் தேர்வாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புதுத் தொடரிலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம் சமந்தா. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.