பிக் பாஸ்: கமலுக்குப் பதில் ஸ்ருதிஹாசன்?


காதி துணிகளை அமெரிக்காவில் அறிமுகம் செய்யச் சமீபமாக சிகாகோ நகரம் சென்றுவந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள கமல், தற்போது தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சிகாகோ சென்றுவந்ததும் கடந்த சனி, ஞாயிறு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் சனிக்கிழமையன்று பங்கேற்றார் கமல். அதன் பின்னரே, தனக்கு கரோனா பாதிப்பு எனக் கமலுக்குத் தெரிய வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்போதிருக்கும் நிலையில் அடுத்த 2 வாரம் கமல்ஹாசன் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கமலால் தொகுத்து வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்தநிலையில், வரும் வாரம் கமலுக்கு மாற்று ஏற்பாடாக ஸ்ருதிஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில், நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதேபோல இடையில் ஓரிரு வாரங்கள் அவர் பிக் பாஸ் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, அவருக்குப் பதிலாக அவரது முன்னாள் மருமகள் சமந்தா அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதற்குப் பிறகு, மீண்டும் நாகார்ஜுனா வந்து தொகுப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதே பாணியைப் பின்பற்றி, கமலின் மகளான ஸ்ருதிஹாசன் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

x