1989-ம் ஆண்டு வெளியான ‘வெற்றி விழா’ திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின்பு நடிகர், இயக்குநர் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தனி அடையாளத்துடன் வலம்வருபவர் பிரபுதேவா. தமிழில் ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘வெடி’, ‘எங்கேயும் காதல்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய நிலையில், சல்மான்கானை வைத்து ‘போக்கிரி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக பிரபுதேவா இயக்கிய ‘வான்டட்’ திரைப்படம் சூப்பர் டூப் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து ஹிந்தியில் முன்னணி இயக்குநராக உயர்ந்து, பாலிவுட்டின் முக்கிய நடிகர்களை வைத்து இயக்குமளவுக்கு முன்னேறினார்.
சமீபத்தில் அவரது இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘ராதே’ திரைப்படம், மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து படங்கள் இயக்குவதற்கு இடைவெளிவிட்டு, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் பிரபுதேவா.
கடந்த சில தினங்களுக்கு முன் அவர் நடித்த பொன் மாணிக்கவேல் படம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அடுத்தடுத்து பிரபுதேவா நடித்த ‘தேள்’, ‘பகீரா’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.
இந்நிலையில், தற்போது ‘ஐர்னி’ என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் பிரபுதேவா. இத்திரைப்படத்தை ஆஷின் குமார் துபே என்பவர் இயக்குகிறார். 2022-ம் ஆண்டு தொடங்கவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆக்ரா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.