திரையரங்கில் தடுப்பூசி அவசியம்: மனித உரிமை மீறல் - சுரேஷ் காமாட்சி காட்டம்


கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசு தொடர்ந்து பல விதிமுறைகளை வகுத்துவருகிறது. மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி 2 தவணைகளில் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட போதிலும், சிலர் போதுமான விழிப்புணர்வு இன்மையாலும், பயம் காரணமாகவும் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதன் காரணமாக கரோனா பெருந்தொற்று ஒரு முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்கள், திரையரங்கங்கள், பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்கள், பொதுக் கூட்டங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற பொது இடங்களில் நடமாடத் தடை விதித்திருந்தது.

இதற்கிடையில் தற்போது பள்ளி, திரையரங்கு (Cinema Theater), மார்க்கெட், கல்லூரிகள் போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்குத் தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக தமிழக பொதுச் சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளுக்குத் தடுப்பூசி கட்டாயம் என்கிற உத்தரவை எதிர்த்து ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது ட்விட்டர் பதிவில் “உலகத்திலேயே திரையரங்கிற்குச் செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை. தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், உண்மையில் அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த விதிமுறை அமலில் உள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அங்கே உள்ள திரையரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பொது இடங்களில் நுழைய முடியும். இது தெரியாமல் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார் என்று ஒரு தரப்பு கூறும் நிலையில், ஆளும் திமுக கட்சியுடன் தொடர்புடைய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகும்போது நடைமுறையிலிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டு, 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்துவிட்டு, தற்போது மீண்டும் விதிமுறைகளை இறுக்குவது ஏன் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

x