தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்பட கதைகளுக்கும் முயற்சிகளுக்கும் பெயர் பெற்றவர் பார்த்திபன். திரைப்படங்களில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் தன்னுடைய கருத்துகளை வித்தியாசமான, கவித்துவமான வார்த்தைகள் மூலம் பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டவர் பார்த்திபன். இதற்காகவே சமூக ஊடகங்களில் அவருக்குத் தனியான ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில் நேற்றிலிருந்து அவருடைய பேஸ்புக் பக்கத்தில் சம்பந்தம் இல்லாத காணொலிகள் அடுத்தடுத்து பதிவாகிவந்தன. பல காணொலிகள் இப்படி பதிவேறிய நிலையில் தன்னுடைய பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பார்த்திபன். தன்னுடைய பதிவில், “என் FB hack செய்யப்பட்டிருக்கிறது. அறிவுள்ளவன் படமெடுக்கலாம், அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம், ஆனால் அறிவுக்கே பிறந்த சில sweet enemies Hack செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ளச் சற்றே நேரம் தேவை.
இனி அறிவித்துவிட்டே fb யில் பதிவிடுவேன். அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள் ignore செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.