ஜெய் பீம்: சம்பளத்தை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்


தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில், அக்னி சட்டி படத்துடன் கூடிய நாட்காட்டி இடம்பெற்றிருந்தது. அது வன்னியர் சமூகத்தை அவமதிப்பதாகக் கூறி, பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து அந்தக் காட்சி மாற்றியமைக்கப்பட்டது.

மேலும் வன்னியர்களின் மனதை சூர்யா புண்படுத்தி விட்டதாகக் கூறி, நஷ்டஈடாக ரூ. 5 கோடியை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பு நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் வலியுறுத்தியது. மேலும், ‘ஜெய் பீம்’ திரைப்படத்துக்கு மத்திய மாநில அரசுகள் விருது வழங்கி அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வசனங்கள் எழுத உதவி புரிந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன், அதற்காக வழங்கப்பட்ட சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எழுத்தாளர் கண்மணி குணசேகரன் தனது முகநூலில் காட்டமாகப் பதிவு செய்துள்ளார்.

அப்பதிவில் “இருபத்திஐந்து ஆண்டுகாலம் எனது எழுத்தில் தவழ்ந்த எம் நடுநாட்டு மொழியை எம் இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்பச் செய்துவிட்ட உங்கள் ஏமாற்றுத் துரோகம் இனி எந்த படைப்பாளிக்கும் வரவே கூடாது.

உங்களால் எனக்கும் எம் இனத்திற்குமாய் சுமத்தப்பட்ட இத்தனை இழிவுகளையும் தாண்டி உங்கள் இழிசெயலால் சம்பாரிக்கிற வருமானத்திலிருந்து நான் பெற்ற அந்த பாவத்தின் சம்பளத்தை வைத்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருக்கிறேன்.

எனவே வட்டார மொழிமாற்ற பணிக்காக தாங்கள் அனுப்பிவைத்தத் தொகை ரூ.50,000/-ஐ (ரூபாய் ஐம்பதாயிரம்) தங்களுக்கே திருப்பும்விதமாக அதற்கான காசோலையினை இக்கடிதத்தில் இணைத்துள்ளேள்.

என் படைப்பை படித்தவர்கள் ஒருபோதும் எனக்கு பழியை நினைக்கமாட்டார்களென நம்பி ஏமாந்துவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்று தூக்கிவிட்டு குலையில் குத்துகிற வஞ்சகர்களை வாழ்வில் ஒருபோதும் சந்திக்காத வண்ணம் என் குலதெய்வம் ‘முதனை செம்பையனார்’ எனக்கு வழிநெடுகத் துணைநிற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கண்மணி குணசேகரனின் முகநூல் பதிவு:

x