2 மாற்றங்கள்... 2 திருமணங்கள்!


மதன் - ரேஷ்மா

இந்த வாரம் தமிழ் சின்னத்திரை ஏரியாவில், ‘இவருக்குப் பதில் இவர்’ என அதிரடி மாற்றங்களும், இரு மனம் இணைந்த இன்பத் தருணங்களும் பேசுபொருளாய் அமைந்தன. ஒரு சின்ன சேஞ்சுக்காக அதுபற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

பரபரப்பாகப் பேசப்படும் சீரியல்களில் ஒன்றான விஜய் டிவியின் 'பாரதி கண்ணாம்மா'வில் ஹீரோயின் மாற்றம் நடந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டர் மூலம் சின்னத்திரை ஹீரோயின்களுக்கான நிற இலக்கணத்தை உடைத்தவர் ரோஷினி. 2 குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்து வந்தார்.

ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த கண்ணம்மா ரோஷினி, திடீரென இந்த சீரியலைவிட்டு விலகியுள்ளார். காரணம் குறித்து தயாரிப்புக் குழு தரப்பில் விசாரித்தபோது, "2 குழந்தைகளுக்கு தொடர்ந்து தாயாக நடித்தால் தனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் அப்படியான கேரக்டர்கள்தான் வரும் என அவர் பயப்படுகிறார். அதனால் விலகிவிட்டார்" என்கிறார்கள்.

வினுஷா

ரோஷினிக்கு நெருக்கமான வட்டாரமோ, "வயதான தனது பெற்றோருடன் அதிகமான நேரம் செலவழிக்க முடியவில்லை என அடிக்கடி வருந்துவார் ரோஷினி. அவர்களுக்காகவே சீரியலைவிட்டு விலகியுள்ளார்" என்கிறார்கள்.

எது எப்படியோ, இந்த வாரத்தில் இருந்து புதிய கண்ணம்மாவாக வினுஷா என்பவர் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். மாடலான இவர் ரீல்ஸ் பிரபலமும் கூட. ரோஷினிக்கு அச்சு அசல் மாறாமல் அடுத்த ஆளை அதே சாயலில் பிடித்துப் போட்டிருக்கிறார்கள் என்பதுதான் வீடெங்கும் இப்போதைய பேச்சு.

அடுத்து, விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர் ’ தொடரில் கதாநாயகியாக மஹா என்ற கேரக்டரில் நடித்துவந்த ரக்சிதா, அந்தத் தொடரிலிருந்து விலகப்போவதாக நீண்ட நாட்களாகவே தகவல் வட்டமடித்தது. இந்த நிலையில், அண்மையில் ரக்சிதாவே இன்ஸ்டாவில் ‘BYE MAHA’ என ஸ்டோரி போட்டு, தனது விலகலை ரசிகர்களுக்கு சூசகமாகத் தெரிவித்தார். ‘இனி வருகிறவரையாவது ஒதுக்காமல் நடிக்க வையுங்கள்’ என்கிற ரீதியிலும் இருந்தது அவரது இன்ஸ்டா பதிவு.

முன்னதாக, ‘சீரியலில் தனக்கு முக்கியத்துவம் குறைவதால் விலகுகிறார், கன்னட சினிமாவில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்ததால் வெளியேறுகிறார்’ என்றெல்லாம்கூட ரக்சிதாவைப் பற்றி யூகங்கள் சுற்றினர். இந்த நிலையில், விஜய் டிவியில் ‘அரண்மனை கிளி’ சீரியலில் நடித்துவந்த மோனிஷா, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் ரக்சிதாவின் இடத்தை நிரப்புவார் என தெரிகிறது.

ஸீ தமிழின் ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நிலை கொண்டிருப்பவர் ஷபானா. கடந்த சில மாதங்களுக்கு முன், தானும் நடிகர் ஆர்யனும் காதலிப்பதாக அறிவித்திருந்தார். ஆர்யன், விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வருகிறார். இவர்களின் காதல் செய்தியை காற்று வாக்கில் அறிந்ததுமே, ‘கேரளா பொண்ணு; சென்னை பையன்... ஸீ தமிழ் பொண்ணு; விஜய் டிவி பையன்... என ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

ஆர்யன் - ஷபானா

கடந்த 11-ம் தேதி, ஷபானா - ஆர்யன் திருமணம் சென்னையில் இனிதே நிகழ்ந்தேறியது. தொடர்ந்து சீரியலில் நடிக்க இருவருமே ஆர்வமாக உள்ளனராம். ஜோடியாக நடிக்க வாய்ப்பு அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரு வேறு சேனல்களில் நடித்தவர்கள் மணமக்களாக மாலை சூட்டிக் கொண்டதுபோல், ஒரே சேனலில் ஒரே சீரியலில் ஜோடியாக நடித்தவர்களும் நிஜ தம்பதியாகி இருக்கிறார்கள்.

ஆர்யன் - ஷபானா

ஸீ தமிழின் ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் நடித்துவந்த ரேஷ்மா – மதன் ஜோடிக்கு அங்கேயே காதல் மலர்ந்தது. பிறகு, கலர்ஸ் தமிழில் ‘அபி டெய்லர் ’ சீரியலில் ஜோடியாக நடித்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றனர். இவர்களும் கடந்த 15-ம் தேதி மாலை மாற்றி மண வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

புதுமண ஜோடிகளை பூங்கொத்துக் கொடுத்து நாமும் வாழ்த்துவோம்!

x