மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார். தமிழில் ‘மீன்குழம்பும், மண்பானையும்’, ‘ஒருபக்க கதை’ ஆகிய திரைப்படங்கில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது, புது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துவருகிறார்.
அந்த வெப் சீரிஸில் நடிப்பதற்காகக் கேரள மாநிலம் மூணாறு பகுதிக்குச் சென்றார் காளிதாஸ். அங்குப் படக்குழுவினருடன் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். விடுதிக்கான அறை வாடகை, ஹோட்டல் கட்டணம் ஆகியவற்றைக் கட்டச்சொல்லி ஊழியர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து படக்குழுவினர் ஆன்லைன் மூலம் பணத்தைச் செலுத்தினர். ஆனால், ஹோட்டல் வங்கிக் கணக்குக்குப் பணம் வரவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள், நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை உடனே கட்டணத்தைக் கட்டுமாறு கூறினர்.
இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஹோட்டல் ஊழியர்கள், நடிகர் காளிதாஸ் ஜெயராம் உட்படப் படக்குழுவினரை விடுதிக்குள் சிறைபிடித்தனர். இதையடுத்து மூணாறு காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர், படக்குழுவினர் ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தினர். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.