எரோடோமேனியாவால் பாதிக்கப்பட்டவராக நடிக்கும் விஜய்


விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘பீஸ்ட்’ திரைப்படம் விஜய்க்கு 65-வது திரைப்படமாகும். அவருடைய 66-வது திரைப்படமாகத் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் திரைப்படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்தப் படம் ‘விஜய் 66’ என்று தற்போதைக்கு அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இத்திரைப்படத்தில் விஜய், எரோடோமேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவராக நடிக்கவுள்ளாராம்.

எரோடோமேனியா என்பது ஒருவர் நம்மை விரும்புகிறார் என்று நாம் நம்புவோம். அவருக்கும் நமக்கும் ஆழமான உறவு இருக்கிறது என்று நம்புவோம். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இருக்காது. நம் கற்பனையில் இருக்கும் நபர் நமக்குத் தெரிந்தவராக இருக்கலாம், நாம் சந்திக்காதவர்களாக இருக்கலாம், பிரபலங்களாக இருக்கலாம். மற்றவர்கள் எடுத்துச்சொல்லி உண்மையை ஆதாரத்துடன் புரியவைக்க முயன்றாலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதுதான் எரோடோமேனியா.

விஜய் 66 திரைப்படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்தால், இது அவரது திரைப்பட வரிசைகளில் மிக வித்தியாசமான திரைப்படமாக அமையும். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே சீரியஸான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய். தற்போது வெளியாகியிருக்கும் தகவல் உண்மையென்றால், விஜய் 66 திரைப்படத்தில் கலகலப்பான வின்டேஜ் விஜய்யைப் பார்க்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

x