வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் நடிக்கும் திரைப்படம் ‘மாநாடு’. கடந்த தீபாவளிக்குத் இத்திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதால், வரும் 25-ம் தேதிக்கு இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.
இன்று, சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தின் ப்ரி-ரிலீஸ் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், சத்யஜோதி தியாகராஜன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தயாரிப்பாளர் தனஞ்சயன், எஸ்.ஜே.சூர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மாநாடு திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு பேசும்போது, “எனக்கு நிறையப் பிரச்சினை கொடுக்குறாங்க. அதை எல்லாம் நான் பார்த்துக்குறேன். என்னை மட்டும் நீங்க பார்த்துக்கோங்க” என்று ரசிகர்களை நோக்கி நா தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். இதையடுத்து கூட்டத்திலிருந்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.