சந்தானம் நடிப்பில் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ள ‘சபாபதி’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சந்தானம் பேசும் போது, ஜெய் பீம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது சந்தானம், “ஒருவரை உயர்த்திப் பேச இன்னொருவரைத் தாழ்த்தி பேசக் கூடாது” என்று பதிலளித்தார். இது, தற்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
லொள்ளுசபா சேனல் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, பின்பு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகப் பரிணமித்த சந்தானம், தற்போது கதாநாயகனாக வலம்வருகிறார். சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்தபோதும் சரி, கதாநாயகனாக மாறிய பின்பும் சரி.. அவருடைய நகைச்சுவை முறை என்பது மாறவே இல்லை. ஆன்டி ஹியூமர், பிளாக் காமெடி, க்ரிஞ் காமெடி, ஸ்லாப்ஸ்டிக் காமெடி, டெட்பேன் காமெடி என்று பல வகைமைகளான நகைச்சுவைகளில் ஒன்றான இன்ஸல்ட் காமெடி (Insult Comedy) மற்றும் அக்ரெஸிவ் ஹியூமர் (Aggressive Comedy) வகைமை நகைச்சுவைகளே, சந்தானத்தின் நகைச்சுவை வழிமுறையாக இருக்கிறது. இந்த வகை நகைச்சுவைகளுக்குத் தமிழில் முன்னோடி கவுண்டமணி.
சந்தானத்தின் நகைச்சுவைகள் முழுக்க முழுக்க சக கதாபாத்திரத்திரங்களின், உருவத்தை, உடற்குறைபாடுகளை, பாலியல் விருப்பங்களை, உடை தேர்வுகளை செய்யும் தொழிலை இழிவுபடுத்தியே இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இன்ஸல்ட் நகைச்சுவைகள் பெரும்பாலும் பிற்போக்குத்தனங்களைக் கேலி செய்யப் பயன்படுத்தப்பட்டால், நம்மூரில் அது அப்படியே தலை கீழாக இருக்கிறது. சமீபத்தில் சந்தானத்தின் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ திரைப்படம், அதற்கு நல்ல உதாரணம்.
பாலியல் குற்றங்கள் அதிகமாகும் இக்காலகட்டத்தில், பெண் ஆடை சுதந்திரத்தில் குறை கண்டுபிடிப்பது தீர்வல்ல. ஆண்களின் வளர்ப்பு முறையில் கவனம் செலுத்தவும் பாலியல் கல்வியை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவரும் இந்நிலையில், ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் நடிகை ஒருவரின் மாடர்ன் உடையைப் பார்த்து “கொஞ்சம் இழுத்தா அவுந்திரும்... இதுக்கு பேரு சுதந்திரமா” என்று வசனம் பேசுவார் சந்தானம். ஏன் ஒருவர் ஆடையை இன்னொருவர் இழுக்க வேண்டும்.. இழுப்பது குற்றமா.. அல்லது ஆடை அணிவது குற்றமா என்ற கேள்வியெல்லாம் சந்தானத்துக்குத் தோன்றவில்லை போலும்.
அதே ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் ஊன்றுகோல் கொண்டு நடிக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரை, ‘ஏய்..சைட் ஸ்டாண்ட்’ என்று அழைப்பார் சந்தானம். மாற்றுத்திறனாளி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு ஒரு வருத்தம்கூட சந்தானம் தெரிவிக்கவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் உருவகேலியும், வசவுகளையும் மட்டுமே கடைபிடித்துவரும் சந்தானம், நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருப்பது, அவருக்கு அவரே சொல்லிக்கொள்ளும் அறிவுரை போலும் என்று சமூக வலைதளங்களில் மீம்கள் குவிகின்றன.
மேலும், சந்தானம் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் இந்த நேரத்தில் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் #சாதிவெறி_சந்தானம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
ஆனால், சந்தானத்தின் பேச்சு சரியாக உள்வாங்கிக்கொள்ளப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர். தன்னுடைய நகைச்சுவையில் பிறரைத் தாழ்த்தி பேசுவதற்கான விளக்கத்தைச் சந்தானம் தெளிவுபடுத்திவிட்டு சமூகக் கருத்துகளைத் தெரிவித்தால். அவரது நகைச்சுவையை வைத்து யாரும் எந்தச் சர்ச்சையையும் கிளப்பமாட்டார்கள்