‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் எழுந்த சர்ச்சையை அடுத்து நடிகர் சூர்யாவிற்கு வன்னியர் தரப்பிலிருந்தும், வலதுசாரிகள் அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துவருகிறது. வன்னியர்களைத் தவறாகச் சித்தரித்ததற்கு மன்னிப்பு கேட்டு, ரூபாய் 5 கோடியை அபராதமாக சூர்யா செலுத்த வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டிருந்தது. நேற்று தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சூர்யாவை ஆதரித்து அன்புமணி ராமதாஸுக்குக் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும், சமூக வலைத்தளங்களில் #weStandwithSurya என்ற ஹேஷ்டேக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக வைரல் ஆகிவந்தது.
பாமகவினர் சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும்!இந்நிலையில், தமிழ்நாடு நடப்பு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் “அன்று என் படம் ‘வேதம் புதிது’ முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் 'ஜெய் பீம்' படமும். இதைப் படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால், நீங்களும் உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.
தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல” என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். நான்கு பக்கம் கொண்ட இந்த அறிக்கையில் மேலும் அவர் “நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பாரதிராஜா அன்புமணி ராமதாஸுக்கான இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெய் பீம் பிரச்சினையில் வன்முறை மூலம் நியாயம் தேடும் நிலையில் பாமக இல்லை!
இதே போல் டி.ராஜேந்தர் மனைவி உஷா ராஜேந்தர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும் நடிகர் சூர்யாவை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.