#WeStandWithSuriya டிரெண்டிங்கில் நடிகர் சூர்யா


ஜெய் பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா

ஜெய்பீம் திரைப்படத்தை முன்வைத்து நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர வலுத்து வருகின்றன. இதன் உச்சமாய் #WeStandWithSuriya என இன்று தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறார் சூர்யா.

ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னிய சமூகத்துக்கு எதிரான சித்தரிப்புகள் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதாக, பாமக நிர்வாகிகள் குமுறி வருகின்றனர். ஆட்சேபம் தெரிவித்தோர் சுட்டிக்காட்டியபடி ஒரு காட்சியில் இடம்பெறும் காலண்டர் சித்தரிப்பை படக்குழுவினர் மாற்றி அமைத்தனர். அதன் பிறகும் சூர்யாவுக்கு எதிரான வார்த்தைப் போர் தணியவில்லை. அதிலும் அன்புமணி ராமதாசுக்கு, சுருக்கமாய் சூர்யா அளித்த ’பெயர் அரசியல்’ பதிலடிக்குப் பிறகே, எதிர்ப்புகள் வேகமெடுத்திருக்கின்றன.

மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலரின் பகிரங்க மிரட்டலும், அன்றைய தினம் சூர்யா திரைப்படம் ஓடிய திரையரங்கில் ஆர்ப்பாட்டம் செய்து படத்தை நிறுத்தியதும் நடந்தது. அடுத்த அதிரடியாக, ரூ.5 கோடி இழப்பீடு மற்றும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோரி வன்னியர் சங்கத்தின் சார்பில், ஜெய்பீம் குழுவுக்கு வக்கீல் நோட்டீசும் சென்றது.

இதற்குப் பின்னரே பொதுவெளியில் சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் திடீரென்று அதிகரித்தனர். ’ஜெய்பீம்’ திரைப்படத்துக்கான தலைப்பை தானம் செய்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் இந்த சூர்யா ஆதரவு டிரெண்டிங்கில் இணைய, அது சமூக ஊடகங்களில் பலமாக எதிரொலித்தது.

ஜெய்பீம் திரைப்படம் வாயிலாக அண்மையில் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கும் சூர்யாவுக்கு, தமிழகத்துக்கு அப்பாலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இன்றைய(நவ.15) டிவிட்டர் டிரெண்டிங்கில் சூர்யாவுக்கான ஆதரவாளர்கள் தேச அளவில் முதன்மை வகித்தனர். சுதாரித்துக்கொண்ட பாமகவினரும் அவர்களது அபிமானிகளும் சூர்யா எதிர்ப்புக் குரலில் மேலும் தீவிரமாகி உள்ளனர்.

ஜெய்பீம் திரைப்படத்துக்கான முதல்சுற்று வரவேற்பு நேர்மறை விமர்சனங்களால் சேர்ந்தது. தற்போது சூர்யா மற்றும் திரைப்படக் குழுவுக்கு எதிரான விமர்சனங்களால், எதிர்மறையாக ஜெய்பீம் திரைப்படத்துக்கான அடுத்த சுற்று விளம்பரமாகி வருகின்றன. இத்தனை களேபரங்களின் மத்தியில் ஓடிடி தளம் அமோகமாய் கல்லா கட்டுகிறது.

x