சிறிய இடைவேளைக்குப் பின்னர், ராஜ்குந்தரா - ஷில்பா ஷெட்டி தம்பதி மீண்டும் ஊடக கவனம் பெற்றுள்ளனர்.
இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்ததாகவும், அவற்றை வெளிநாடுகளிலிருந்து செயல்படும் ஆபாச ஓடிடி செயலிகள் மூலமாக கடைபரப்பியதாகவும், ஜூலை மத்தியில் மும்பை போலீஸார் ராஜ்குந்த்ராவை கைது செய்தனர். பெரும் சட்டப் போராட்டத்துக்கு பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். அதேவேகத்தில், தான் ஆக்டிவாக செயல்பட்டு வந்த சமூக ஊடக கணக்குகள் அனைத்தையும் அழித்தார். இதுநாள்வரை பொதுவெளியில் தலைகாட்டாது இருக்கிறார்.
மனைவி ஷில்பா ஷெட்டி மட்டும் வழக்கம்போல, தனது கட்டுடல் பரமாரிப்புக்கான பிரத்யேக செயலிக்கான வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களுக்காக சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். பொதுவெளியில் கணவர் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்தார். முன்னதாக கணவர் ராஜ்குந்த்ராவின் ஆபாசப் படங்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பரிந்து பேசியவர், பின்னர் கணவர் நிறுவனத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஒதுங்கிக்கொண்டார்.
தற்போது, 'ராஜ்குந்த்ரா - ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் 2014-ல் உடற்பயிற்சி நிலையக் கிளை ஆரம்பிப்பதாக கூறி ரூ1.50 கோடி ஏமாற்றியதாக', பாந்த்ரா காவல் நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் புகார் தந்திருக்கிறார். போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக டிவிட்டரில் உடனடி பதில் தந்த ஷில்பா ஷெட்டி, 'இது விளம்பரத்துக்காக அளிக்கப்பட்ட புகார்; எங்களுக்கும் மேற்படி குற்றச்சாட்டுக்கும் சம்பந்தமில்லை' என்று மறுத்திருக்கிறார்.