இலக்கியமும் சினிமாவும் நெருங்கிய கலை வடிவங்கள். ஒன்று எழுத்து வடிவமும் மற்றொன்று காட்சி வடிவமும் கொண்டது. சிந்தனையில் உதிப்பதை எழுத்து வடிவத்தில் கொண்டுவருவது சவாலான காரியம். அப்படி எழுத்து வடிவத்தில் இருப்பதைக் காட்சி வடிவமாக்குவது அதைவிட சவாலானது. இந்தச் சவாலைச் சாதனை ஆக்கிய இயக்குநர்கள் உலக அளவில் பலரும் உண்டு. தமிழில் அந்தச் சவால்களை நம் திரைக்கலைஞர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? இப்போது என்ன நிலைமை? அலசுவோம்.
தொடக்ககாலத் தமிழ்ப் படங்கள் இந்தியப் புராணக் கதைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டன. சத்தியவான் - சாவித்திரி, நள – தமயந்தி போன்ற புராணக் கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். அதற்கு அடுத்த காலகட்டத்தில் அதிகமாகத் தமிழ்ச் சமூக நாவல்கள் படமாக்கப்பட்டன. தமிழின் முன்னோடித் துப்பறிவுக் கதை எழுத்தாளரான வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய ‘மேனகா’, ‘மைனர் ராஜாமணி’ உள்ளிட்ட சில நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் முன்னோடிப் பெண் எழுத்தாளரான வை.மு.கோதைநாயகி அம்மாளின் நாவல்கள் பலவும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள் கல்கி, அகிலன், ராஜரிஷி, ரா.கி.ரங்கராஜன், ராஜாஜி உள்ளிட்ட எழுத்தாளர்களின் நாவல்கள் படமாக்கப்பட்டுள்ளன.
மகேந்திரன், ஜெயகாந்தன், ஆர்.சி.சக்தி...
இடைக்காலத்தில் நாவல்கள் படமாக்கப்படுவது குறைந்துபோனது. 1980-களில் ‘சகலகலாவல்லவன்’, ‘முரட்டுக்காளை’ போன்ற படங்கள் போட்டுத் தந்த புதுப் பாதையால் வந்த விளைவாக இருக்கலாம். கதையம்சம் உள்ள படங்களும் குறைவாகவே வந்தன. ஒரு பக்கம் மகேந்திரன், ஜெயகாந்தன் போன்றோர் நாவல்களைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிந்தாலும் அது பரவலான போக்காக மாறவில்லை. ரஜினிகாந்தின் தொடக்ககாலப் படங்களில் ஒன்றான ‘முள்ளும் மலரும்’ படம் எழுத்தாளர் உமா சந்திரன் அதே பெயரில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான். வெற்றிபெற்ற இந்தப் படம், ரஜினியின் நடிப்புப் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாகவும் இருக்கிறது. பொன்னீலன், புதுமைப்பித்தன் ஆகியோரின் கதைகளையும் முறையே ‘பூட்டாத பூட்டுகள்’, ‘உதிரிப்பூக்கள்’ ஆகிய பெயர்களில் மகேந்திரன் படமாக்கியுள்ளார். மகேந்திரன் கடைசியாக எடுத்த ‘சாசன’மும் எழுத்தாளர் கந்தர்வனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டதுதான்.
ஜெயகாந்தன் தனது நாவல்களான ‘யாருக்காக அழுதான்’, ‘உன்னைப் போல் ஒருவன்’ ஆகிய நாவல்களை, தானே இயக்கியுள்ளார். அவரது நாவல்களான ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘கைவிலங்கு’, ‘ஊருக்கு நூறுபேர்’ போன்ற நாவல்கள் இயக்குநர்கள் பீம்சிங், கே.விஜயன், பி.லெனின் ஆகியோரால் படமாக்கப்பட்டுள்ளன. இவை அல்லாமல் அனுராதா ரமணனின் ‘சிறை’, ‘கூட்டுப்புழுக்கள்’ ஆகிய நாவல்கள் ஆர்.சி.சக்தியால் படமாக்கப்பட்டன. அவற்றில், மிக முக்கியமான முயற்சியாக ‘சிறை’ திரைப்படம் கருதப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் கே.பாலசந்தரின் படங்களும் நாவலுக்கு இணையான கதையம்சமுள்ள படங்களாக இருந்தன. புஷ்பா தங்கதுரையின் ‘ஒரு ஊதாப் பூ கண்சிமிட்டுகிறது’ நாவல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்திலும் ‘நந்தா என் நிலா’ நாவல் ஏ.ஜெகந்நாதன் இயக்கத்திலும் வெளிவந்தன.
அருகிப்போன முயற்சிகள்
சிவசங்கரி, ரா.கி.ரங்கராஜன், சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் பல நாவல்கள் திரைப்படங்களாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் தொடர்ச்சி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. பிறகு முழுக்கவும் பொழுதுபோக்கை முன்னிறுத்தும் மசாலாப் படங்களின் வருகையாக இருந்தது. இக்காலக்கட்டத்தில் நாவலை அடிப்படையாக வைத்துப் படமெடுப்பது என்பது, ஒரு பெரிய செய்தியாகும் அளவுக்கு அந்த முயற்சி அருகிப்போனது. தமிழ் எழுத்தாளர்கள் பலர் திரைப்படத் துறையில் பணியாற்றத் தொடங்கினாலும் அவர்களது பங்களிப்பு வசனம் எழுதுவது என்ற நிலையிலேயே இருந்தது.
தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலை அதேபெயரில் ஞானராஜசேகரன் திரைப்படமாக்கினார். இது, உண்மையில் கவனிக்கத்தக்க முயற்சியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதனால் இந்த முயற்சிகள் தொடரவில்லை எனலாம்.
மீண்டும் தொடங்கிய முயற்சிகள்
இயக்குநர் பாலா தொடர்ந்து தன் படங்களில் இலக்கியப் படைப்புகளைப் பயன்படுத்திவந்தார். அவரது ‘பிதாமகன்’ படம் ஜெயகாந்தனின் ‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி’ என்ற கதையின் சாரம் கொண்டது. அதேபோல் அவரது ‘நான் கடவுள்’ திரைப்படமும் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தின் வசனகர்த்தாவும் ஜெயமோகன்தான். பாலாவின் ‘பரதேசி’ திரைப்படமும் பி.எச்.டேனியல் எழுதிய ‘ரெட் டீ’ (Red Tea) என்னும் ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். இந்தப் படத்தில் நாஞ்சில்நாடன் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார். தங்கர்பச்சான் தனது ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலை அதே பெயரில் படமாக்கியுள்ளார்.
சமீபத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த ‘நோட்டா’ படமும் ஷான் கருப்பசாமியின் ‘வெட்டாட்டம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. படம் தோல்வியடைந்தாலும் புதிய எழுத்தாளரின் படைப்பு திரைவடிவமானது வரவேற்கத்தக்க விஷயம். வெற்றிமாறனின் ‘விசாரணை’ படமும் மு.சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். வெற்றிமாறனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மிகவும் பேசப்பட்ட ‘அசுரன்’ திரைப்படம் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. இவையெல்லாம் இலக்கிய, சினிமா ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றவை. வெற்றிமாறன் தொடர்ந்து தனது படங்களில் நாவல்களைப் பயன்படுத்திவருகிறார். இது ஆரோக்கியமான மாற்றம். அடுத்ததாக அவர் இயக்கவிருக்கும் படம் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை அடிப்படையாகக் கொண்டிருப்பது இலக்கிய வாசகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் இன்னொரு செய்தி!
வழிகாட்டும் மலையாள சினிமா
தமிழுடன் ஒப்பிடும்போது அதன் நெருக்கமான மலையாளத்தில், இந்த முயற்சிகள் தொடக்கத்தில் இருந்தே ஆரோக்கியமாக இருக்கின்றன. தகழி சிவசங்கரன் பிள்ளை, விகேஎன், எம்.டி.வாசுதேவன் நாயர், பி. பத்மராஜன் போன்றவர்கள் தொடங்கி பி.எஃப். மாத்யூ, உன்னி ஆர், எஸ்.ஹரீஷ், வினாய் தோமஸ் வரை அந்தக் கண்ணி இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் வெளிவந்த இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘ஜல்லிக்கெட்டு’ எஸ்.ஹரீஷின் ‘நக்சலைட்’ என்னும் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான். 80-களில் தமிழ் எழுத்தாளர் வாஸந்தியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘கூடெவிடே’ என்னும் மலையாளப் படம் பி.பத்மராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.
ஆனால் தமிழில், வெற்றிமாறன், பாலா போன்ற வெகுசிலரைத் தவிர புனைவெழுத்துகளைத் திரைவடிவமாக்குவதில் ஆர்வம் செலுத்தாதது துரதிருஷ்டம்தான். வெகுஜனப் பார்வையாளர்கள் இதையெல்லாம் விரும்பமாட்டார்கள் என முடிவெடுப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழில், நாவல்களிலிருந்து உருவாக்கப்பட்ட படங்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றன என்பதைப் புதிய இயக்குநர்கள் மனதில் கொள்ள வேண்டும். புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் குறிப்பிட்டதுபோல், “எதையெல்லாம் எழுத முடிகிறதோ அதையெல்லாம் படமாக்கவும் முடியும்.” அதற்கான முயற்சிகளைத் தமிழ்த் திரைப் படைப்பாளிகள் இன்னும் அதிகமாக முன்னெடுக்க வேண்டும்!