ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் 41


முள்ளும் மலரும் படப்பிடிப்பில்...

கூத்து, நாடகம், நடனம் ஆகியவற்றின் தன்மை வேறு. சினிமாவின் தன்மை வேறு. சினிமா இந்த நூற்றாண்டின் கலை. அறிவியல் வளர்ச்சி ஈன்ற ஆச்சரியமான குழந்தை. இதில் காட்சி வழியாக எந்தவொரு நிகழ்வையும் பார்வையாளருக்கு காட்ட வேண்டும். உணர்வுகளை, நிகழ்வுகளை வசனங்கள்வழியாக வெளிப்படுத்த, மேடை நாடகமும் கண்களை மூடிக்கொண்டு கேட்க வானொலி நாடகமும் இருக்கின்றன என்ற புரிதலைக் கொண்டிருந்தார் இயக்குநர் மகேந்திரன். ஆனால், எந்த மாதிரியான திரைப்படங்கள் வேண்டாம் என்று நினைத்தாரோ அதேபோன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுத வேண்டிய நிலையே தொடக்கத்தில் அவருக்கு இருந்தது.

“என்னுடைய சினிமாவில், மெல்லுணர்வுகளை நடிகர்கள் தங்களுடைய முகபாவங்கள், உடல்மொழி வழியாகவும் சிறு சிறு வசனங்கள் வழியாகவும் வெளிப்படுத்தும் விதமாக கதை சொல்ல வேண்டும். அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் சினிமா இயக்கலாம்” என்று மகேந்திரன் மனதுக்குள் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில்தான், ஸ்டுடியோ தொழிலாளியாக இருந்து பட அதிபராக உயர்ந்த ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார், மகேந்திரனை அழைத்தார். “நம்மோட இவ்வளவு வருஷத்துப் பழக்கத்தை வைச்சுச் சொல்கிறேன்... எனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுப்பா. கமல் உனக்கு ரெக்கமெண்ட் பண்றார்” என்றார் செட்டியார்.

ரஜினியா வேண்டவே வேண்டாம்!

‘தங்கப் பதக்கம்’ படத்துக்கு மகேந்திரன் எழுதிய கதை, வசனத்தை மனதில் வைத்தே, அதேபோன்று ‘வசனங்கள்’ நிறைந்த படத்தை எடுத்துத் தருவார் என்று நினைத்தார் தயாரிப்பாளர். கமல் சிபாரிசு செய்தாலும், வேணு செட்டியார் தன் மீது நம்பிக்கை வைத்துக் கேட்டது மகேந்திரனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால், இவர் என்னமாதிரி படத்தை எதிர்பார்க்கிறார் என்று தெரிந்ததும், “என்னிடம் கதையில்லை” என்று சொல்லி நழுவப் பார்த்தார் மகேந்திரன்.

ஆனால், வேணு செட்டியார் விடுவதாயில்லை. அதனால், “ஒரு அண்ணன் தங்கச்சி கதையிருக்கு பண்ணலாமா?” என்றார் மகேந்திரன். “ஓ... அருமைப்பா. அதுபோதும். நடிகர்களை தேர்வு பண்ணிட்டுச் சொல்லு. கால்ஷீட் வாங்கி ஷூட்டிங் போயிடலாம்” என்று சொல்லிவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸுக்கான காசோலையையும் அந்த நிமிடமே மகேந்திரனிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் செட்டியார்.

ஒருவரிக் கதையைக் கேட்டு ஓகே சொல்லிவிட்டுப் போய்விட்டாரே... என்று மகேந்திரனுக்கு ஆச்சரியம்! உமா சந்திரனின் முள்ளும் மலரும் நாவலை வாசித்து, அதன் மையச் சரடை மட்டும் எடுத்துகொண்டு ‘முள்ளும் மலரும்’ திரைக்கதையை நாட்குறிப்புகள் போல் தன்னுடைய டைரியில் 50 பக்கங்களுக்கு எழுதி வைத்திருந்தார் மகேந்திரன். ‘இதுதான் நாம் எடுக்கப்போகும் படத்தின் திரைக்கதை என்று தெரிந்தால், எந்தத் தயாரிப்பாளரும் வாய்ப்புக்கொடுக்கமாட்டார்கள்’ என்று எண்ணிக்கொண்ட அவர், ரஜினியைச் சந்தித்து முதல் பட வாய்ப்பு வந்திருப்பதைச் சொன்னார்.

“கங்கிராட்ஸ் மகி... எந்த ஸ்கிரிப்ட்?” என்றார் ரஜினி. ‘முள்ளும் மலரும்’ கதையை ஏற்கெனவே ரஜினியுடன் டிஸ்கஸ் செய்திருந்த மகேந்திரன், “நாம் ஏற்கெனவே பேசி இருந்த அண்ணன் - தங்கை கதைக்கு தயாரிப்பாளர் ஓகே சொல்லிவிட்டார்” என்று சொன்னார். இதைக் கேட்டதும், “வெரிகுட் மகி… காளி மனசுக்குள்ள வளர்ந்துக்கிட்டேயிருக்கான். எப்பன்னு சொல்லுங்க. நான் ரெடி” என்றார் ரஜினி. மகேந்திரன் ரஜினியிடம் எதிர்பார்த்தது இதைத்தான்.

ரஜினி ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் என்பதை அறிந்திருந்த மகேந்திரன், காளி கதாபாத்திரத்துக்கு அவரைவிடச் சிறந்த சாய்ஸ் இருக்கமுடியாது என்று நம்பினார். அடுத்தநாளே, “அண்ணன் கேரக்டருக்கு யாரைப் போடப்போறே?'' என்று வேணு செட்டியார் கேட்டார். “ரஜினிகாந்த்” என்று மகேந்திரன் சொன்னதுமே செட்டியாருக்கு முகம் சுருங்கிவிட்டது. “என்னப்பா... விளையாடுறியா? லோக்கல் வில்லனா நடிக்கிறார். ஆளு நல்ல கருப்பு வேற. ரஜினி வேண்டவே வேண்டாம்” என்றார். கலையை சுவாசமாகக் கொண்ட மகேந்திரன், சடக்கென்று உணர்ச்சிவசப்பட்டார். “சாரி சார்... காளி கேரக்டருக்கு நூறு சதவீதம் ரஜினிகாந்த்தான் பொருத்தமாக இருப்பார். தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க” என்றார். “உனக்கு ரஜினிகாந்த் நெருக்கமான நண்பன்கிறதால இப்படி வீம்பு பிடிக்கிறியா?” என்று மடக்கினார் செட்டியார்.

கமல் உட்பட, மகேந்திரனும் ரஜினியும் நெருங்கிப் பழகியதை அன்றைய திரையுலகம் நன்றாகவே அறிந்து வைத்திருந்தது. “ரஜினி எனக்கு நண்பராவே இல்லாமல் இருந்திருந்தாலும் காளி கேரக்டருக்கு அவரைத்தான் தேர்வு செஞ்சிருப்பேன்” என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்னார் மகேந்திரன்.

“அப்படி என்னய்யா அதிசயமான கேரக்டர்... அண்ணன் என்ன வில்லனா?” என்று கேட்டு கதையை மோப்பம் பிடித்தார் செட்டியார். “வில்லன்னாலே கெட்டவன்தானா... அவனுக்குள்ள நல்ல குணமே இருக்காதா? நான் டைரக்ட் பண்ணுவேன் என்று நம்பித்தானே கூப்பிட்டிங்க... இப்போ காஸ்டிங் விஷயத்துல சுதந்திரம் இல்ல... படம் முழுக்க உங்க தலையீடு இருக்கும்னு தெரிஞ்சுபோச்சு. நாம இப்பவே நல்லபடியா விலகிடலாம் சார்” என்று மகேந்திரன் தடலாடியாகச் சொன்னார்.

ஆடிப்போனார் செட்டியார். “யோவ்... யோவ்... மகேந்திரா... சோ சொன்னாரு. உன்னைச் சீண்ட வேணாம்னு. சடக்குன்னு பொங்குறியே. நீ... நீயாச்சு, உன்ற படமாஞ்சு. உன் இஷ்டப்படியே எல்லாத்தையும் முடிவு பண்ணிக்க. நான் கிட்ட வரமாட்டேன்” என்று கொங்கு தமிழில் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டார் வேணு செட்டியார். சொன்னபடியே, ஊட்டியிலும் சிருங்கேரியிலும் நடந்த படப்பிடிப்பை அவர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

கடுப்பான சரத்பாபு!

ஒரு படத்தின் வெற்றிக்குத் திரைக்கதையும் அதற்கேற்ற நடிகர் தேர்வும்தான் பிரதானம் என்பதில், உறுதியாக இருந்தார் மகேந்திரன். அதைக் காட்சியில் கொண்டுவர, ரசனையும் காட்சிமொழியும் மிகுந்த ஒளிப்பதிவாளர் இருந்தால்தால் விஷுவல் சினிமா எடுக்க முடியும் என்று நம்பியவர். அப்போது, சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்ற அசோக்குமார் மலையாளப் படவுலகில் கலக்கிக்கொண்டிருந்தார். அவரை அணுகியபோது, வரிசையாக 4 படங்களை ஒப்புக்கொண்டிருந்ததைச் சொன்னார். உடனே கமலிடம் சென்றார் மகேந்திரன். “ஊட்டியின் குந்தா பவர் ஸ்டேஷனில் உள்ள வின்ச் ஸ்டேஷன், அதைச் சுற்றிய மலைப்பகுதி வாழ்க்கையை வெகு இயல்பாக காட்சிகளில் கொண்டுவர ஒரு ரசனையான ஒளிப்பதிவாளர் தேவை” என்று கேட்டார். அப்போது புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்று ’கோகிலா’ என்கிற கன்னடப் படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருந்த பாலுமகேந்திராவை பரிந்துரைத்தார் கமல். அப்போதே பாலுமகேந்திராவை அழைத்து மகேந்திரனுக்கு அறிமுகமும் செய்து வைத்தார்.

மகேந்திரன், பாலுமகேந்திரா, கமல்

ஊட்டியிலும் சிருங்கேரியிலும் வழக்கமான படப்பிடிப்பு நடப்பது போலவே இல்லை. படக்குழுவின் கடைசி ஊழியரையும் கூட , “வாங்க... போங்க” என தனக்கே உரிய இயல்புடன் மரியாதையாக நடத்திய ஒரு இயக்குநரைப் பார்த்து, அத்தனைபேரும் அமைதியாகப் பொறுப்பாக வேலை பார்த்தார்கள். படப்பிடிப்பில் கலகலப்புக்கும் பஞ்சமில்லை.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் படம்பிடித்துக் கொண்டிருந்தார் மகேந்திரன். அண்ணன் காளி ஏற்பாடு செய்த மாப்பிள்ளையுடன் தங்கை வள்ளிக்கு விடிந்தால் கல்யாணம். காளி தூங்கிக்கொண்டிருக்கும்போது, வள்ளியை இன்ஜினியருக்கு மணம் முடித்துவைக்க காளியின் மனைவியும் ஊராரும் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். கண்விழித்துச் சுதாரித்துக்கொண்டு விரைந்தோடி எதிரேவரும் காளியை, பிரச்சினை பண்ணாமல் விலகிச் செல்லும்படி ஊரார் எச்சரித்துவிட்டு காளியைக் கடந்து செல்கிறார்கள். அவர்கள் கொஞ்ச தூரம் போனதும், அண்ணன்தான் எனக்கு முக்கியம் என்பதைச் சொல்ல காளியிடமே ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்கிறாள் வள்ளி.

அப்போது காளி, “இப்ப என்னடா சொல்றீங்க... இப்போ உங்க முகத்த எங்க வெச்சுக்கப்போறீங்க. இந்த உலகத்துல அண்ணன்தான் எனக்குப் பெருசுன்னு சொல்லிட்டாள்ல என்னோட வள்ளி... மனப்பூர்வமா என் தங்கச்சிய உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலே சார்...” என்று ரஜினி வசனம் பேசும் காட்சியின், கடைசி 2 ஷாட்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஒருமுறை ஒத்திகை பார்த்து முடித்ததும் லஞ்ச் பிரேக் விடப்பட்டது.

பிறகு 2 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், சரத்பாபுவை காணவில்லை என்று உதவி இயக்குநர்கள் ஓடிவந்து பதறினார்கள். தயாரிப்பு நிர்வாகி தன்னுடைய உதவியாளர்களுடன் நாலாபக்கமும் தேடினார். சென்னைக்குச் செல்வதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சிடுசிடுவென்று அமர்ந்திருந்தார் சரத்பாபு. அவரைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்துக் கொண்டு வந்தார்கள். 2 மணிநேரம் ஓடிவிட்டது. இயக்குநர் மகேந்திரன் அருகில் வந்த சரத்பாபு, “அது எப்படி சார்… ‘இப்பக்கூட என்னைப் பிடிக்கலை’ன்னு இந்த ஆள் சொல்லலாம்?” என்று கேட்டார். இதைக்கேட்டு அருகில் இருந்த ரஜினி கொல்லென்று சிரிக்க... அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டார்கள்.

முள்ளும் மலரும் படத்தில்...

சரத்பாபு இன்னும் கடுப்பானார். அவரைச் சமாதானப்படுத்திய மகேந்திரன், “நீங்க ஒரு குழந்தை ஜென்டில்மேன்... காளியானவன் குமரன்கிற தன்னோட மேலதிகாரியைக் கடைசிவரைக்கும் வெறுக்கிறான். அது காளியோட கேரக்டரைசேஷன். ஆனா, காளியா நடிக்கிற ரஜினிகாந்த் இன்ஜினியரா நடிக்கிற சரத்பாபுவை வெறுக்கலே. கேரக்டரை இவ்வளவு ஆழமா உள்வாங்கிட்டதாலத்தான் நீங்க இப்படி கோபப்பட்டிருக்கீங்க. ஐ அப்ரிசியேட்” என்று சொன்னதும், சமாதானம் ஆனார் சரத்பாபு. படப்பிடிப்பு முடிந்து எடிட் செய்து பார்த்தபிறகுதான், ஒரு முக்கியமான காட்சியை எடுக்காமல் விட்டுவிட்டோம் என்பதை எண்ணிப் பதறினார் மகேந்திரன்.

(சரிதம் பேசும்)

x