காதலர் கரம்பற்றினார் நடிகை சந்திரா லட்சுமணன்


தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த ‘மனசெல்லாம்’, ‘ஏப்ரல் மாதத்தில்’, ஜெயம்ரவி நடித்த ‘தில்லாலங்கடி’, ரஞ்சித் நடித்த ‘அதிகாரம்’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான சந்திரா லட்சுமணன்.

சினிமா வாய்ப்பு குறைந்ததும் டிவி சீரியல் பக்கம் சென்றவர், மலையாளத்தில் முன்னணி சீரியல் நடிகையாக உயர்ந்தார். கடந்த 18 ஆண்டுகளாகத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவரும் சந்திரா லட்சுமணன், இதுவரை 50-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, ‘வசந்தம்’, ‘மகள்’, ‘துளசி’, ‘சொந்த பந்தம்’, ‘பாசமலர்’ போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

38 வயதாகும் சந்திரா, இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலிருந்தார். இந்நிலையில், ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள சீரியலில் நடித்து வரும் சந்திராவுக்கும், அவருடன் நடிக்கும் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தன் காதலைச் சந்திரா ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

நேற்று முன்தினம், கேரளாவிலிருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டார்கள். சந்திரா, டோஷுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

x