மருத்துவமனையில் பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி லலிதா


கே.பி.ஏ.சி லலிதா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபல மலையாள நடிகையான கே.பி.ஏ.சி லலிதாவின் உடல்நலன் முன்னேற்றமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் குணச்சித்திரப் பாத்திரங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் லலிதா. தமிழிலும் பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் இவர் உள்ளார். இதுவரை 550க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள லலிதா, பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவி ஆவார். 1991 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசியவிருதும், நான்குமுறை கேரள அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார்.

கே.பி.ஏ.சி லலிதா

74 வயதாகும் லலிதா, இரு தினங்களுக்கு முன்னர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக திருச்சூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவருக்கு, அங்கே உடல்நிலை மோசமடைந்ததால் கொச்சிக்கு மாற்றப்பட்டார்.

மலையாள நடிகர் சங்கத்தின் செயலாளரான இடைவேளை பாபு இது தொடர்பாக கூறுகையில், ‘லலிதாவுக்கு கல்லீரல் பிரச்னை இருந்துவந்தது. அதுதொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனோடு கட்டுப்பாடற்ற நீரிழிவும் அவரது உடல்நலத்தை பாதித்துள்ளது. அவருக்கான கல்லீரல் மாற்றுசிகிச்சை குறித்தும் மருத்துவர்கள் பரிசீலித்து வருகின்றனர். முன்னிருந்ததைவிட தற்போது அவரது உடல்நலனில் முன்னேற்றம் தெரிகிறது’ என்றார்.

லலிதாவின் மகனும், இயக்குனரும் நடிகருமான சித்தார்த் பரதன், ’தனது தாயாரின் உடல்நலம் தேறிவருவதாக’ சமூக ஊடக பதிவில் உறுதிசெய்துள்ளார்.

x