‘வேதாளம்’ ரீமேக்கில் தமன்னா


தமன்னா

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். 2015-ல் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்தை 'போலா சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இதில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க, அவரது தங்கையாக லட்சுமி மேனன் தமிழில் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்ருதிஹாசன் தமிழில் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் யார் நடிப்பார் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமன்னா நடிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிக்கையைத் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நவம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது பற்றி தமன்னா, “மெகா பிரம்மாண்டமான ஒரு படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. சிரஞ்சீவி சாருடன் மீண்டும் நடிப்பதற்கு ஆவலாய் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு சிரஞ்சீவி நடித்த 'சை ரா நரசிம்ம ரெட்டி' படத்தில் அவரது காதலியாக நடித்திருந்தார் தமன்னா.

x