‘ஜெய் பீம்’ : நிஜ ராசாக்கண்ணு மனைவிக்கு வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்


சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்ந்து பல தாக்கங்களை ஏற்படுத்திவருகிறது. இத் திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தற்போது வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு, தான் வீடு கட்டிக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், “செய்யாத குற்றத்திற்காகச் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய நிலையை அறிந்து வருத்தமுற்றேன். பார்வதி அம்மாளுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்கிறேன். பார்வதி அம்மாளின் வறுமை நிலையை எனது கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

மேலும், 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்குத் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவுக்கும், ஜெய்பீம் படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் ஞானவேல் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் எனப் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

x