‘விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு’


அர்ஜுன் சம்பத், விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, அண்மையில் பெங்களூர் விமான நிலையத்தில் தாக்குதலுக்கு ஆளானதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கியது. இதுதொடர்பாக இருதரப்பிலும் இருந்து இருவேறான தகவல்கள் சொல்லப்பட்டன. ஆனபோதும், பொதுவெளியில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் கண்டனங்களுக்கு ஆளானது.

அந்தச் சம்பவத்தை முன்வைத்து, நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிவித்த கருத்துகள் என்ற பெயரில், குறிப்பிட்ட தரப்பினரை சீண்டும் தகவல்கள் பரப்பப்பட்டன. இதற்கிடையே நவ.7 அன்று, இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜுன் சம்பத், தனது கட்சியின் ட்விட்டர் கணக்கில், விஜய் சேதுபதிக்கு எதிரான ஒரு பதிவை போட்டிருந்தார்.

அதில், ‘தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூ.1001/- வழங்கப்படும்‘ என்று அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார். மேலும் அதில், ‘விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும்வரை அவரை உதைப்பவருக்கு 1 உதை = ரூ.1001’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைகளுக்கும், ஆட்சேபகரமான அதிரடி கருத்துகளுக்கும் புகழ்பெற்ற அர்ஜுன் சம்பத்தின் ட்விட்டர் பதிவை, எவரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. அர்ஜுன் சம்பத்தின் எதிர் கருத்தாளர்கள் சிலர், அவர் பாணியிலேயே அங்கு பதில் பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, விஜய் சேதுபதி தரப்பிலிருந்தும் உடனடியாக எந்த எதிர்வினையும் எழவில்லை.

ஆனால், தமிழகச் சூழலில் ஒரு தனிப்பட்ட நபரைக் குறிவைத்து வன்முறையைத் தூண்டும் வகையில், பொதுவெளியில் ஆட்சேபகரமாய் செய்யப்பட்டிருக்கும் பதிவு, சர்ச்சையைக் கிளப்பி இருப்பதுடன் மோசமான முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது.

x