இது எனக்கு படமல்ல; பாடம்!


ஷெரினா

சமுத்திரக்கனியால் இப்படியும் ஒரு படத்தை தரமுடியுமா? என ஓடிடி பார்வையாளர்கள் வியந்து பாராட்டிவரும் படம் ‘விநோதய சித்தம்’. அதில், ஆண்ட்ரியா என்ற தனது பெயரை மகாலட்சுமி என மாற்றிச் சொல்லவேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் பெண்ணாக நடித்து அசத்தியவர் ஷெரினா. ரகுமான், விதார்த் ஆகியோருடன் இணைந்து ‘அஞ்சாமை’ என்ற படத்திலும் நடித்துமுடித்துள்ளார். “மாடலிங், சினிமா இரண்டும் எனக்கு இரண்டு கண்கள்” என்று சொல்லும் ஷெரினா, ‘ஃபெமினா மிஸ் இண்டியா சவுத்’ பட்டம் வென்றவர். காமதேனு வார இதழுக்காக அவர் அளித்த தனிப் பேட்டி.

உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தரலாமா?

நான் பிறந்தது கேரளாவில். வளர்ந்ததும் படித்ததும் பெங்களூருவில். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பிபிஎம் முடித்தேன். நிறைய தமிழ் மாணவர்கள் நண்பர்கள் என்பதால், நன்றாகவே தமிழ்பேசக் கற்றுக்கொண்டேன். ஆர்தொடாக்ஸ் புரோட்டஸ்டாண்ட் கிறித்தவக் குடும்பம் எங்களுடையது. ப்ளஸ் டூ முடித்த பிறகு பைலட் ஆகவேண்டும் என்கிற கனவுடன் இருந்தேன். ஆனால், ‘விநோதய சித்தம்’ படத்தில் வருவதுபோல் என் வாழ்க்கையில் விதி வேறுவிதமாக வேலைசெய்துவிட்டது.

ஷெரினா என்றால் மாடலிங் துறையில் பிரபலமான பெயராக இருக்கிறது. ஆர்தொடாக்ஸ் குடும்பம் என்கிறீர்கள். பெற்றோர் ஆதரவு எப்படி இருந்தது?

நான் மாடலிங் துறையில் நுழைந்தது ஒரு விபத்து. எனது தோழிகளுடன் பெங்களூருவின் பிரபல ஃபேஷன் மாலுக்கு ஷாப்பிங் சென்றிருந்தேன். அங்கே பிரபல ஃபேஷன் பத்திரிகை, பன்னாட்டு நிறுவனமான ஃபோர்டுக்காக தென்னிந்திய மாடலைத் தேர்வு செய்யும் பப்ளிக் ஆடிசன் நடந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்த எனது தோழிகள், “வாங்க நாம எல்லாருமே நம்ம லக்கை ட்ரை பண்ணுவோம்” என்று சொல்லி, என் பெயரையும் கொடுத்து கூட்டத்தின் உள்ளே தள்ளிவிட்டார்கள்.

எனக்குக் கூச்சம். தோழிகளுக்காக அந்த ஆடிசனில் சொன்னபடி செய்தேன். கேமராவில் பதிவு செய்தார்கள். அடுத்தநாள், 14 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்று என்னைச் சொன்னார்கள். கர்நாடகா சார்பில் தேர்வான பின், தென்னிந்திய அளவில் நடக்கும் ஆடிசனுக்கு ஹைதராபாத் வரச்சொன்னார்கள்.

இதை வீட்டில் சொன்னதும் பெரிய ரகளையாகிவிட்டது. “நீ மாடலிங் தேர்வுக்குச் செல்கிறாய் என்று நம்முடைய சர்ச் ஆட்களுக்குத் தெரிந்தால் என்னாவது?” என்று அப்பா கதறினார். அப்போது எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தன்னம்பிக்கை வந்ததோ தெரியாது. “நாம் மற்றவர்களுக்காக வாழ்கிறோமா... நமக்காக வாழ்கிறோமா அப்பா?” என்று கேட்டுவிட்டேன். திகைத்துப்போன அப்பா, “என்டே பொண்ணு மோளே... போய்க்கோ… கர்த்தா உன்னுட ஜீவிக்கும்” என்று பச்சைக்கொடி காட்டினார்.

அதன்பிறகு அம்மா கொடுத்த சப்போர்ட்தான் முக்கியமானது. ஹைதராபாத், மும்பை என்று ஆடிசன் முடியும் வரை எனது பாதுகாப்புக்காக வந்தார். அதனால் இன்னும் அதிகமாக உழைப்பைக் கொடுத்து ‘ஃபெமினா மிஸ் இண்டியா சௌத்’ பட்டத்தை வென்றேன். பின்னர் இந்திய அளவில் நடத்தப்பட்ட ‘ஃபோர்டு சூப்பர் மாடல் ஆஃப் இந்தியா’ போட்டியில் கலந்துகொண்டு கடும்போட்டிக்கு நடுவே டைட்டிலை வென்றேன். அதன்பிறகு, மாடலிங் உலகில் 4 ஆண்டுகள் இடைவிடாத பயணம். பல பிராண்டுகள், பல ஃபேஷன் பரேடுகள் என நல்ல புகழுடன் பணமும் கிடைத்தது. சென்னை சில்க்ஸ், மலபார் கோல்டு, போத்தீஸ் உள்ளிட்ட பல தமிழக பிராண்டுகளுக்கு அழைப்பு வந்ததால் தற்போது குடும்பத்துடன் சென்னையில் குடியேறிவிட்டேன்.

மாடலிங் உலகில் பெண்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படுகிறதா?

உண்மையைச் சொன்னால், ஆண் மாடல்களைவிட பெண் மாடல்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள். ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் பெண் மாடல்களை வைத்தே விளம்பர உலகம் இயங்குகிறது. ஆனால், சினிமாவில் அப்படியே தலைகீழ் என்று கேள்விப்படுகிறேன். அங்கே ஆண் நடிகர்களுக்குத்தான் அதிக சம்பளம். இதுவும் மாறும்.

சமுத்திரக்கனியின் கண்களில் எப்போது பட்டீர்கள்?

‘யாஷ்கோ’ வேட்டி - சட்டை விளம்பரத்தில் சமுத்திரக்கனியுடன் தோன்றவேண்டும் என்றார்கள். உடனே ஓகே சொன்னேன். மலையாளப் படங்களில் சமுத்திரக்கனி சாரை எனக்குப் பிடிக்கும். அந்த விளம்பரத்தில் அவருடன் நடித்தபோது, “உனது நடிப்பு இயல்பாக இருக்கிறது... என்னுடைய அடுத்த படத்தில் உன்னை அறிமுகப்படுத்தட்டுமா?” என்றார். “நான் ஏற்கெனவே ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து முடித்துவிட்டேன்” என்றேன். ஆச்சரியப்பட்ட அவர். “நல்லதாகப் போய்விட்டது” என்று ‘விநோதய சித்தம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

நான் படத்துக்காக என்னைத் தயார் செய்துகொள்ள அவரிடம் ‘ஹோம் ஒர்க்’ பற்றி கேட்டேன். அவரோ, “அதெல்லாம் எதுவும் வேண்டாம். உனது கதாபாத்திரம் பற்றிக்கூட எதுவும் தெரிந்துகொள்ளாதே. பிளைன் மைண்டுடன் ஷூட்டிங் வா. நான் சொல்வதைச் செய். அப்புறம் பார். உன்னுடைய கேரக்டர் எவ்வளவு அழகாக வருகிறது என்று. கேரக்டருக்காக தயாரானால் நாடகத்தனமானக நடிக்க ஆரம்பித்துவிடுவோம்” என்றார். அது முற்றிலும் சரி. இப்போது எல்லோரும் எனது நடிப்பைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். விநோதய சித்தம் எனக்கு படமல்ல; பாடம்.

உங்கள் அறிமுகப் படம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது? அதில் என்ன கதாபாத்திரம்?

‘அஞ்சாமை’ படம் முழுமையாகத் தயாராகி சென்சாரும் ஆகிவிட்டது. இதில் ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபடும் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்டாக நடித்துள்ளேன். இதில் எனக்கு பலவித கெட்டப்புகளும் உண்டு. படத்தின் இயக்குநர் சுப்புராம், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகிய இயக்குநர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். ரகுமான், விதார்த் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடித்தது புதிய அனுபவம்.

x