உலக அளவில் உருவான சிறந்த திரைப்படங்களைப் பட்டியலிட்டால், முதல் 100 இடங்களுக்குள் பல கேங்ஸ்டர் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ‘காட்பாதர்’, ‘ஸ்கார் ஃபேஸ்’, ‘நைட் அண்ட் தி சிட்டி’, ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் அமெரிக்கா’, ‘மீன் ஸ்ட்ரீட்’, ‘குட் ஃபெல்லாஸ்’ போன்ற பல கேங்ஸ்டர் திரைப்படங்கள் ஹாலிவுட்டின் தனித்துவமான அடையாளங்களாக இன்று அறியப்பட்டாலும், ஆரம்ப காலகட்டங்களில், கேங்ஸ்டர்களை வெறுமனே வில்லன்களாகச் சித்தரித்தே திரைக்கதைகள் எழுதப்பட்டன.
அப்படியான சூழலில், கேங்ஸ்டர்களை எதிர்மறை நாயகனாக (Anti-Hero) வைத்து வெற்றித் திரைப்படங்களை இயக்க முடியும் எனச் சாதித்துக் காட்டியவர் மெர்வின் லிராய். மேலும், 1930-களில் அமெரிக்காவை உலுக்கிய பெரும் பொருளியல் வீழ்ச்சி (Great Depression) காலகட்டத்தில் மிகச் சிறப்பான வகையில், குறைவான செலவில் சிறந்த திரைப்படங்களை இயக்கிய வெகு சில இயக்குநர்களில் மெர்வின் லிராய் மிக முக்கியமானவர்.
வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட பூகம்பம்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாநிலத்தில், மளிகைக் கடை வைத்திருந்த செல்வந்தரான ஹாரி லிராய்-எட்னா தம்பதிக்கு 1890 அக்டோபர் 15-ல் மகனாகப் பிறந்தார் மெர்வின் லிராய். செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்த லிராயின் வாழ்வைப் புரட்டிப்போட்டது, 1906-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவை உலுக்கிய பூகம்பம். உடைமைகள் அனைத்தும் இழந்து வறுமையில் தள்ளப்பட்டார். தன்னுடைய 12-வது வயதில் தினசரி நாளிதழ்கள் விற்கும் வேலையில் சேர்ந்தார். நாளிதழ்கள் விற்கும்போது, தான் தெருவில் சந்தித்துப் பேசிய காவல் துறையினர், பாலியல் தொழிலாளிகள், பத்திரிகையாளர்கள், மதுபான கடையில் வேலை செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், சீனாவிலிருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் போன்றோரின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. அவர்களின் வாழ்க்கைமுறையைப் புரிந்துகொண்டதுதான், பின்னாட்களில் சிறப்பான கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்க தனக்கு உதவியாக இருந்ததாக லிராய் தெரிவித்திருக்கிறார்.
நாடகக் கலைஞன், சாப்ளின் ரசிகன்
1914-ல் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஆல்கஸார் தியேட்டர் அருகில் நாளிதழ் விற்றுக்கொண்டிருக்கும்போது, பிரபல மேடை நாடக நடிகரான தியோடர் ராபர்ட்ஸின் கண்களில் பட்டார் லிராய். துறுதுறுவென கவனம் ஈர்த்த சிறுவன் லிராயை தன்னுடைய நாடகங்களில் பயன்படுத்திக்கொள்ள ராபர்ட்ஸ் முடிவுசெய்தார். அக்காலகட்டத்தில் சார்லி சாப்ளினை உன்னிப்பாகக் கவனித்து, அவரைப் போலவே நடை உடை பாவனைகள் செய்வதில் திறமையானவராக இருந்தார் லிராய். 1915-ல் சாப்ளின் போல் மாறுவேடமணிந்தவர்களுக்கான போட்டி நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட அப்போட்டியில் முதல் பரிசு பெற்றார் லிராய். நகைச்சுவை உணர்ச்சிகளைத் திறமையாக மக்களிடையே வெளிப்படுத்துவதால், தொடர்ந்து அவருக்கு நாடகங்களில் வாய்ப்புகள் குவிந்தன.
உதவி ஒளிப்பதிவாளராக...
நாடகங்களில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்த லிராய், 1914-ல் ‘தி பெரில்ஸ் ஆஃப் பவ்லின்’ என்ற திரைப்படத்தில் சிறு வேடம் ஏற்று நடித்தார். முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டதும் இனிமேல் நம் வாழ்க்கையில் பிரதான பங்கு சினிமாவுக்குதான் என்ற முடிவெடுத்துவிட்டார். அவருக்கு 19 வயது நிறைவடைந்தபோது, ‘ஃபேமஸ் பிளேயர்ஸ்’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான அடால்ஃப் ஸுகோருடன் நெருங்கிய நட்பிலிருந்த தன்னுடைய உறவினரான ஜெஸ்ஸி எல்.லாஸ்கி மூலம் சிபாரிசு பெற்று, ‘ஃபேமஸ் பிளேயர்ஸ்-லாஸ்கி கார்ப்பரேஷன்’ நிறுவனத்தில் நடிகர்களின் உடைகளை மடித்து அடுக்கும் வேலையில் சேர்ந்தார். சுறுசுறுப்பும் சாதுரியமான புத்தியும் கொண்ட அவருக்கு, விரைவில் அந்நிறுவனத்தின் ஃபிலிம் லேபில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அச்சமயம் அந்த நிறுவனம் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு படத்தின் இயக்குநரான வில்லியம் டிமில், ஏரியில் பிரதிபலிக்கும் முழு நிலவை ஸ்டூடியோவில் செட் போட்டுப் படம்பிடிக்கத் திட்டமிட்டிருந்தார். இதை அறிந்துகொண்ட லிராய், ஒரே இரவில் தனி ஒருவராக 12 அடி நீளம் கொண்ட ஒரு அட்டைப்பெட்டியில் தாரை உட்புறமாகப் பூசி, அதில் தண்ணீரை நிரப்பி, ஸ்டுடியோ விளக்கை நிலவாக மாற்றி அங்கே இருந்த ஒரு கேமராவில் அதைக் காட்சியாகப் பதிவுசெய்து, டிமிலிடம் அடுத்தநாள் சமர்ப்பித்தார். அட்டகாசமாக வந்திருந்த அந்தக் காட்சியைப் பார்த்து, லிராயை தன் திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக நியமித்தார் டிமில்.
தொடர்ந்து டிமிலிடம் வேலைபார்த்து வந்த லிராய், கருத்து வேறுபாடு காரணமாக டிமிலின் சகோதரரான செசில் டிமிலிடம் பணிக்குச் சேர்ந்தார். உலகின் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ திரைப்படத்தில் செசில் டிமிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார் லிராய். இதுபோக பல திரைப்படங்களில் நகைச்சுவைத் துணுக்கு எழுதிக் கொடுக்கும் பணியையும் செய்துவந்தார்.
முதல் திரைப்படம்
1927-ல், ‘நோ பிளேஸ் டு கோ’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வெற்றிகரமான இயக்குநராக அறிமுகமானார் லிராய். இதைத் தொடர்ந்து, ‘ஹெரால்டு டீன்’, ‘ஓ.கே’ போன்ற நகைச்சுவைத் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். 1930-களின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பெரும் பொருளியல் வீழ்ச்சி ஏற்பட்டதால், தொழில்கள் அனைத்தும் முடங்கிப்போயின. இக்காலகட்டத்தில் வறுமையிலும், வெறுமையிலும் வாடித் தவித்த மக்களுக்கு ஒரே பொழுதுபோக்காக சினிமாக்கள் மட்டுமே இருந்தன. அக்காலகட்டத்தில் அதிகமான சினிமாக்களைத் தயாரித்து வெளியிட்ட வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநராக இருந்தார் மெர்வின் லிராய்.
கேங்ஸ்டர் கதைகளின் தொடக்கப் புள்ளி
தொடர்ந்து பல நகைச்சுவைத் திரைப்படங்களை இயக்கிவந்த லிராய், 1936-ல் ‘லிட்டில் சீசர்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். வில்லியம் ஆர். பர்னட் எழுதிய ‘லிட்டில் சீசர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம்தான், முதன்முதலில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முழுநீள கேங்ஸ்டர் திரைப்படம். இன்று நாம் வியந்து பார்க்கும் பல கேங்ஸ்டர் திரைப்படங்களில் அடிநாதம் இப்படத்தின் திரைக்கதைதான். சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் ஒருவன் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தவறான வழியில் சென்று எப்படி பெரிய தாதாவாக மாறுகிறான், பின்பு அவன் செய்த காரியங்களே அவனுடைய வீழ்ச்சிக்கு எப்படிக் காரணமாகின்றன என்ற வழக்கமான கேங்ஸ்டர் கதைகளுக்கு அடித்தளம் போட்ட படம்தான் ‘லிட்டில் சீசர்’. அக்காலகட்டத்தில் அமெரிக்காவை, குறிப்பாக சிகாகோ மாநிலத்தைக் கதிகலங்கச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் தாதாவான, அல் கபோனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டது படத்தின் வெற்றிக்கு மேலும் வலுசேர்த்தது.
தொடர்ந்து, ‘ஐயம் எ ஃபிஜிடிவ் ஃப்ரம் எ செயின் கேங்’ (1932), ‘ஆயில்ஸ் ஃபார் தி லேம்ப்ஸ் ஆஃப் சைனா’(1935) போன்ற திரைப்படங்களின் மூலம் சமூகத்தின் அவலங்களை மிக நாசூக்காகத் தன்னுடைய திரைப்படத்தில் வெளிப்படுத்திவந்தார் லிராய். 1937-ல் அவர் இயக்கிய ‘தே வோன்ட் ஃபர்கெட்’ (1937) திரைப்படத்தில் நிற வெறியர்கள் கறுப்பினத்தவர்களைக் கூட்டமாகச் சேர்ந்து அடித்துத் தூக்கிலிடும் கொடுமையை மிகக் கடுமையாகச் சாடியிருப்பார்.
சிறந்த தயாரிப்பு மேலாளர்
ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தயாரிப்பு மேலாளராகவும் திகழ்ந்தார் லிராய். பெரும் பொருளியல் வீழ்ச்சி காலகட்டங்களில் திரைப்படமெடுத்து பழகியிருந்த லிராய்க்கு, சிக்கனமான முறையில் திரைப்படங்களை எப்படி இயக்குவது என்பதில் மிகுந்த அனுபவமிருந்தது. இதன் காரணமாக எம்.ஜி.எம் பட தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராகவும் பணிபுரிய ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில், உலகில் அதிகமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஆரம்பகாலத் திரைப்படங்களில் ஒன்றான ‘தி விஸார்ட் ஆஃப் ஓஸ்’(1939) திரைப்படத்தின் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து, அத்திரைப்படத்தை வெற்றிகரமாகத் தயாரித்து முடிப்பதில் பெரும் பங்காற்றினார்.
25 ஏக்கரில் 65 விதமான செட்களில், அக்காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படமான ‘விஸார்ட் ஆஃப் ஓஸ்’ ஒரு பெரும் திரை அதிசயம்தான். இத்திரைப்படத்துக்குப் பின்பு மேலாளர் பணியிலிருந்து விலகி, மீண்டும் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார் லிராய். 2-ம் உலகப்போர் நடந்த சமயத்தில் அமெரிக்க ராணுவத்தையும் அமெரிக்கக் கொள்கைகளையும் பரப்பக்கூடிய விதமாக அவர் எடுத்த ‘தர்ட்டி செகண்ட்ஸ் ஓவர் டோக்கியோ’ திரைப்படம் பார்க்க வேண்டிய ஒன்று. 2-ம் உலகப் போருக்குப் பின்பு லிராய் பல புதினங்களையும் நாவல்களையும் தழுவி நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு வகைமைகளில் திரைப்படங்களை இயக்கினார்.
38 வருடங்கள் நீண்ட கலைப்பயணம்
1950-ல் பைபிளின் கிளைக் கதையான ‘ஆக்ட்ஸ் ஆஃப் பீட்ட’ரைத் தழுவி, லிராய் இயக்கிய ‘கோ வாடிஸ்’ திரைப்படம், வரலாற்றில் அவருக்குப் பெரும்புகழ் பெற்றுத் தந்தது. தன் கலை வாழ்க்கையை ஆரம்பித்து 38 ஆண்டுகளில் பல அற்புதமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த லிராய், இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, 1987 செப்டம்பர் 13-ம் தேதி தனது 86-வது வயதில் இறந்தார்.
‘காட்பாதர்’ தொடங்கி ‘புதுப்பேட்டை’, ‘ஆரண்ய காண்டம்’ என்று எந்த கேங்ஸ்டர் திரைப்படம் பார்த்தாலும் அதில் மெர்வின் லிராயின் பங்கு ஏதேனும் ஒரு மூலையில் நிச்சயம் இருக்கும் என்பது மட்டும் உறுதி.