வாய்ப்பே கிடைக்காமப் போனாலும் பரவா இல்ல...


அபி நவ்யா

செய்தித் துறையில் இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்து ஜொலித்துக் கொண்டிருப்பவர் அபி நவ்யா. பிரியமானவள் தொடரில் அறிமுகமாகி, சன் டிவியின் கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து...

நீங்க தமிழ் பொண்ணுனு கேள்விப்பட்டோம்... உங்களைப் பற்றிச் சொல்லுங்க?

ஆமாங்க... திருச்சிதான் எனக்கு சொந்த ஊரு. அங்கதான் ஸ்கூல் முடிச்சிட்டு, காலேஜ்ல யு.ஜி அங்கேயே பண்ணேன். வீட்ல எல்லாரும் டீச்சிங் ஸைடு போகச் சொன்னாங்க. ஆனா எனக்கு, நியூஸ் ஃபீல்டுல வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாளாவே ஆசை இருந்துச்சு. அதனால சென்னை வந்து பி.ஜி படிக்க விஸ்காம் சேர்ந்தேன். படிச்சிட்டு இருக்கும்போதே மீடியால ட்ரை பண்ணிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துல நியூஸ் ரீடர் வாய்ப்புக் கிடைச்சது. அதனாலே படிப்பைக் கட் பண்ணிட்டு, நியூஸ் ரீடர் ஆகிட்டேன். அதோட ஆங்கரிங்லயும் குதிச்சாச்சு.

நியூஸ் ரீடர் டூ சீரியல் ஆக்டர் பயணம் பற்றிச் சொல்லுங்க?

என்னோட ஃபிரெண்டோட ஃபிரெண்ட் மூலமாதான் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அவங்க பிரியமானவள் சீரியல்ல வொர்க் பண்றப்போ 3 அக்கா தங்கச்சிங்க ஒரே மாதிரி இருக்குற ரோல்க்கு ஆள் தேடிருக்காங்க. நான் டிவியில் நியூஸ் வாசிக்கிறத பார்த்தவங்க, என் ஃபிரெண்ட் கிட்ட சொல்லி, எனக்கு நடிக்க விருப்பம் இருக்கானு கேட்டு, என்னோட புரொஃபைல் கேட்டாங்க. நானும் அனுப்புனேன். அதுக்கு பிறகு ஆடிசன் வச்சு, செலக்ட் பண்ணாங்க. அடுத்து, சிவா மனசுல சக்தி, கண்மணினு வாய்ப்புகள் அமைஞ்சு 4-வது சீரியலா கயல்ல நடிச்சிட்டு இருக்கேன்.

இருந்தாலும்... நியூஸ் ரீடிங் வேலையும் தொடர்ந்து பார்ட் டைம்மா பண்ணிட்டு இருக்கேன். ஏன்னா... நான் நியூஸ் ரீடரா இருக்கணும்னு எங்க வீட்ல விரும்புறாங்க. அவங்க ஆசையையும் பூர்த்தி பண்ணணும்ல.

ஏற்கெனவே மீடியாவில் அறிமுகம் இருந்தாலும் நடிப்புனு வரும்போது, அது இன்னொரு தளம். அங்க இருந்த சவாலை எப்படி எதிர்கொண்டீங்க?

ஸ்டுடியோவுக்கு உள்ள இருந்து நியூஸ் ரீடரா கேமராவை ஃபேஸ் பண்றது வேற. நடிக்கணும்னு வந்த பிறகு சுத்தி நிறையப் பேர் இருப்பாங்க. எல்லோரையும் கவனிச்சு நடிக்க ஆரம்பத்துல கஷ்டமாதான் இருந்தது. போகப்போக டைரக்டர் ரொம்பவே சொல்லிச் சொல்லி கொடுத்து கைடு பண்ணாங்க. அப்புறம் ஈசி ஆகிருச்சு.

இப்போ நார்மல் லைஃப்ல பண்ற ஆக்டிவிட்டிஸ் மாதிரி என்னோட சீரியல் கேரக்டரை நடிச்சிடுறேன். ஆரம்பத்துல இருந்தே என்னோட நிறைய சீனியர் நடிகர் - நடிகைகள் நடிச்சிட்டு வர்றதால அவங்களோட கைடன்ஸ் நிறைய கிடைச்சது. குறிப்பா, அழுகிற சீன்ல நான் ரொம்ப ட்ரை பண்ணி அழுவேன். அது ஆர்டிஃபீசியலா தெரியும். அதுக்கு காரணம், இயல்பாகவே நான் ரொம்ப தைரியமான பொண்ணு; எதுக்கும் அழுதது இல்ல. இருந்தாலும் நடிப்புனு வரும்போது ஆர்டிஃபீஷியலா தெரியாம எப்படி அழணும்னு என்னோட கூட நடிச்ச சீனியர் ஆக்டர்ஸ்தான் சொல்லிக் கொடுத்தாங்க.

சின்னத்திரை தாண்டிய கனவு ஏதும் உண்டோ?

சீரியல்லையே நிறைய வாய்ப்புகள் வருது. கமிட் ஆன சீரியலை கரெக்டா முடிச்சி கொடுக்கணும்ங்கிறதால வேற எந்த வாய்ப்பையும் பரிசீலிக்கறது இல்ல. அதேநேரம் தொடர்ந்து செகண்ட் லீட் தான் பண்ணிட்டு இருக்கேன். அதுபத்தியும் நிறையப் பேர் கேட்கிறாங்க. ஆனா, மெயின் லீட் ரோலை எப்படிப் பெறணும்கிறதுல எனக்குனு சில பிரின்சிபில்ஸ் இருக்கு. அதை எக்காரணம் கொண்டும் சமரசம் பண்ணிக்கக் கூடாதுனு உறுதியா இருக்கேன். அப்படியான வாய்ப்பே கிடைக்காமல் போனாலும் பரவா இல்ல. கிடைச்ச ரோல நல்லபடியா நடிச்சா போதும். இப்போ சினிமாவிலும்கூட தங்கச்சி ரோலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்கள் வருது. அந்த மாதிரியான படங்களில் நடிக்கலாம்னும் இருக்கேன்.

x