ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அதிகார வெறியாட்டங்களையும், அவற்றிலிருந்து மீள வழிகாட்டும் சட்டப் போராட்டத்தின் மாண்பையும் பேசுகிறது ’ஜெய் பீம்’ திரைப்படம். நேரடி ஓடிடி வெளியீடாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இத்திரைப்படம், தமிழகம் தாண்டி பிற மொழிகளிலும் பேசுபொருளாகியிருக்கிறது.
புறக்கணிக்கப்பட்ட குரல்
ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கணிசமாக படித்தவர்கள் உருவாகி வருகிறார்கள். இடஒதுக்கீடு மூலம் அவர்களுக்கான கல்வியும், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் தலைவர்களும், வாக்கரசியலுக்காக அதைச் செவிமெடுக்கும் அதிகார பீடங்களும் பரவலாகி வருகின்றன. ஆனால், அவர்களிலும் கடைநிலையில் அநாதரவாக கிடக்கும், பழங்குடியினரின் குரலைக் கேட்பாரில்லை. தொல்குடிகளாக இருந்தவர்கள் இன்று வசிக்கவோ, உழைத்துப் பிழைக்கவோ சொந்த நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். குடிமக்களுக்காக, ஜனநாயக அரசு வழங்கும் எந்தவொரு உதவியும் சென்று சேராது புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்தப் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை, அவர்களுக்கான குரலை ஒரு சினிமாவில் பதிவு செய்ததற்காக ஜெய் பீம் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்கான காட்சி மொழியிலும், கதை சொல்லலிலும் சமரசமின்றி அவற்றைப் பதிவு செய்திருப்பதும் வரவேற்புக்குரியது.
இன்னொரு ’விசாரணை’
கோணமலை கிராமத்தின் இருளர் சமூக மக்கள், ஊரிலிருந்து விலகி மண் சுவரும் பனையோலைக் கூரையுமாய் வசிக்கிறார்கள். அவர்களில், கல்வீடு கட்டும் கனவோடு வாழும் ராசாகண்ணு-செங்காணி தம்பதியைச் சுற்றி கதை தொடங்குகிறது. குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, குடும்பத்தைப் பிரிந்து வெளியூர் செங்கல் சூளைக்குப் பிழைக்க போகிறான் ராசாகண்ணு. ஊர்த்தலைவர் வீட்டில் நடந்த திருட்டால் மேலிட அழுத்தத்துக்கு ஆளாகும் போலீஸார், ராசாகண்ணு உள்ளிட்ட சிலரைக் கைது செய்து தங்கள் பாணியில் விசாரிக்கின்றனர். திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு போலீஸ் சித்திரவதைகளுக்கு ஆளாகும் கணவன் ராசாகண்ணுவை மீட்க, மனைவி செங்காணி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்துருவை நாடுகிறாள். சட்டத்தை உயிராக மதிக்கும் அந்த வழக்கறிஞரால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்ததா என்பதே ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் கதை.
மண்ணின் கதை
உண்மைச் சம்பவம் ஒன்றை அதற்கு வெகுநெருக்கமான சித்தரிப்புகளுடன், பாதிக்கப்பட்டவர்களின் ரத்தமும் சதையுமான அவலங்களைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முயல்கிறது ‘ஜெய் பீம்’. ஆவணப்படமாகவோ, ‘கோர்ட் டிராமா’ பாணி படமாகவோ முடிந்துவிடக்கூடிய கதையை, ரசிகர்களின் மனதைக் கனக்கச் செய்யும் உருக்கமான படைப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். பொதுச் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட, அரசாலும் அதிகாரங்களாலும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வேதனையைச் சாட்டையாய் சொடுக்கிப் பேசவும் செய்கிறது இப்படம். மலையாளத் திரைப்படங்களின் உயிரோட்டமான கதைப் பின்னல்களையே அதிகம் சிலாகித்துவந்த கோலிவுட் ரசிகர்களை ‘ஜெய் பீம்’ வாயடைக்கச் செய்திருக்கிறது. நமது மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும், தீர்க்கப்படாத பிரச்சினைகளைப் பேசுபொருளாக்கினால், செம்மையான திரைப் படைப்புகளை உருவாக்க முடியும் என்பதற்கும் இந்தப் படம் சாட்சியாகிறது.
காண விரும்பா காட்சிகள்
ராசாகண்ணுவின் குடும்பமும், சக பழங்குடியின மக்களும், அவர்களது எளிய வாழ்க்கையும் அத்தனை அழகு. எலியும், பாம்பும் இன்னபிற விலங்குகளும் தவிர்க்கவியலாது இடம்பிடித்த அவர்களின் வாழ்க்கை, ஊர் மக்களிடமிருந்து விலகியே இருக்கிறது. வீடுகளில் அச்சுறுத்தும் பாம்புகளைப் பிடிக்க மட்டுமே இருளர்களை ஊர் மக்கள் அணுகுகிறார்கள். வாக்குரிமை, இலவசப் பட்டா உள்ளிட்ட உரிமைகள் அனைத்தும் இருளர்களுக்கு மறுக்கப்படுகிறது. இம்மக்களைக்கூட எங்கேனும் கடந்து வந்திருப்போம். ஆனால், போலீஸாரின் பொய் வழக்குகளில் கணக்குக்காகச் சிக்கவைக்கப்படும் பழங்குடியின மக்களின் துயரமும், படிக்கச் செல்லும் பள்ளியிலும் இருளர் குழந்தைகளை அந்தப் பழி துரத்தி வருவதும், அதிகாரத் திமிருடன் போலீஸாரின் லாக்கப் சித்திரவதைகளுக்கு ஆளாவதும்... பொதுச் சமூகம் கண்டிராதது; அல்லது காண விரும்பாதது.
சந்துருவாக சூர்யா
பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடத் துணியும் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா. வழக்கறிஞராகத் தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கி, உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த நீதியரசர் சந்துருவின் பாத்திரத்தை, அதன் இயல்பு கெடாதும், சினிமாவுக்கே உரிய பாவனைப் பூச்சுக்குள் அடக்கியதுமாக அளவான நடிப்பில் சூர்யா மிளிர்கிறார். தீர்க்கமான பார்வையும், கறுப்பு அங்கிக்குள் விடைத்த உடலுமாக, சிறுமை கண்டு வெடிக்கும் காட்சிகளுமாக சூர்யா பார்வையாளர்களை ஆட்கொள்கிறார்.
மணிகண்டன் - லிஜோ மோல்
சூர்யாவைக் காட்டிலும் ராசாகண்ணு-செங்காணி தம்பதியாக வரும் மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸின் நடிப்பு படத்துக்குப் பெரும் பலமாக இருக்கிறது. சித்ரவதைக்குப் பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டால், வாழ்நாள் முழுக்க திருட்டுப் பட்டத்தைச் சுமக்க நேரிடும் என்பதற்காக நெஞ்சுறுதியுடன் போராடும் மணிகண்டனின் அப்பாவி முகம், மனதைவிட்டு அவ்வளவு எளிதில் அகலாது.
துயரத்தையும் அச்சத்தையும் தொண்டையில் அடக்கிக்கொண்டு, ஆதரவைத் தேடும் லிஜோ மோலின் விழிகளும் நம்மைக் கலங்கடிக்கின்றன. பிரகாஷ்ராஜின் நடிப்பும் சிறப்பு. அதிலும் காவல் துறையை அடியோடு வெறுக்கும் வழக்கறிஞருடன், ஒரு நல்ல நோக்கத்துக்காக ஒரே கோட்டில் பயணப்படுவதை வெளிப்படுத்திய விதத்தில், தனித்துவ நடிப்பைத் தருகிறார் பிரகாஷ்ராஜ். லாக்கப்பில் அப்பாவிகளை வெளுத்தெடுக்கும் அக்கிரமக்கார எஸ்.ஐ., குருமூர்த்தியாக நடித்திருக்கும் இயக்குநர் தமிழும் அவரது உலோக முகமும், காவல் நிலையக் காட்சிகளின் உக்கிரத்தைக் கூட்டுகின்றன.
கடைசி ஆதாரம்
வழக்கமான சூர்யா படமாக இல்லாதபோதும், கதாநாயக பிம்பத்துக்கான சில காட்சிகளும் அதற்கான நீதிமன்ற முழக்கங்களும் கதையின் மையத்திலிருந்து பிசிறடிக்க வைக்கின்றன. ஆனபோதும் கதை உணர்த்த வரும் கலை அமைதிக்கு பங்கமின்றி, சந்துருவை அடக்கி வாசிக்கச் செய்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். கூர்மையான வசனங்களுடனான நீதிமன்றக் காட்சிகள் ஒரு த்ரில்லருக்கு இணையான வேகத்துடன் நகர்கின்றன. உணர்வுபூர்வமான காட்சிகளில், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு முகத்திலறைகிறது. ஷான் ரோல்டன் இசை, பாடல்களில் மட்டும் கவனிக்கவைக்கிறது.
பழங்குடியினரின் வாழ்வாதாரம், அப்பாவிகள் மீதான லாக்கப் சித்திரவதைகள், ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்துக்குப் பாராமுகமாகும் பொதுச் சமூகம், பொய் வழக்குகளால் சிறையில் வாழ்நாளைக் கழிக்கும் விசாரணைக் கைதிகள், அரசு மற்றும் அதிகார வர்க்கங்களின் கண்ணிகளாக இயங்குவோரின் தடித்தனம்... என ஒரே கதைக்குள் பல்வேறு அநீதிகளை ‘ஜெய் பீம்’ தோலுரிக்கிறது. கூடவே, ஆதரவற்றோரின் கடைசி ஆதாரமான சட்டத்தின் மாண்பையும் விளங்கச் சொல்லி நம்பிக்கையூட்டுகிறது.