ஆந்திராவை அலறச்செய்த கொள்ளையனின் கதை: ‘டைகர்’ நாகேஸ்வரராவ்


2014-ம் ஆண்டு தமிழில் ‘நெடுஞ்சாலை’ திரைப்படம், தார்ப்பாய் முருகன் என்ற புகழ்பெற்ற கொள்ளையனின் கதையை மையமாகக்கொண்டு வெளியாகி வெற்றியடைந்தது. இதே வழிமுறையில், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 1970-ம் ஆண்டு வாழ்ந்த பிரபல கொள்ளையன் ‘டைகர்’ நாகேஸ்வரராவின் வாழ்க்கை, அவர் பெயரிலேயே திரைப்படமாகிறது. அவர் கொட்டத்தை அடக்கப் பலமுறை காவல் துறை அவரை சிறையில் அடைத்தாலும், அடைத்து வைக்கப்பட்ட அத்தனை சிறைகளிலிருந்தும் அவர் தப்பித்திருக்கிறார். ஒவ்வொரு சிறையிலிருந்தும் அவர் எப்படித் தப்பித்தார் என்பதை ஆந்திர காவல் துறை பயிற்சி மையத்தில் பாடமாக வைத்துள்ளனர். இறுதியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கதைதான் இப்போது திரைப்படமாகிறது. டைகர் நாகேஸ்வரராவாக ரவி தேஜா நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார் ரவி தேஜா. இத்திரைப்படத்தில் அவரது உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றம் முன்னெப்போதிலும் இல்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தை இயக்கவிருக்கும் வம்சி, கடந்த 3 ஆண்டுகளாகத் தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இது ரவி தேஜாவின் முதல் அகில இந்தியத் திரைப்படமாகும். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இத்திரைப்படம் உருவாகிறது. விரைவில் இத்திரைப்பட வெளியீடு பற்றிய செய்திகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

x