தீபாவளி ரிலீஸ் தமிழ் திரைப்படங்கள்


தீபாவளி திரைப்படங்கள்

தமிழ்கூறும் நல்லுலகுக்கு சினிமா இல்லாத தீபாவளி முழுமை அடையாது. அந்த வகையில் திரையரங்கிலும், ஓடிடியிலும் இந்த தீபாவளிக்கு வெளியான தமிழ் திரைப்படங்களின் அறிமுகம் இங்கே..

அண்ணாத்த

அண்ணாத்த

சூப்பர் ஸ்டார் எப்போது வெளியானாலும் அதை தீபாவளியாக கொண்டாடும் ரசிகர்கள், தீபாவளி சிறப்பு திரைப்படமான 'அண்ணாத்த'யை அதிகாலை தொடங்கி ஆராதித்து வருகின்றனர். திரையரங்குகள் தீபாவளி கோலம் பூண்டிருக்க, திரைகொள்ளாத நடிகர் பட்டாளத்தால் திரைப்படமும் திருவிழா போன்றே நகர்கிறது. கரோனாவால் கதவடைத்திருந்த திரையரங்கின் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப, சூப்பர் ஸ்டார் பெரும் கடமையாற்றி இருக்கிறார். என்னது.. கதையா..? ரஜினிகாந்த் படம் என்பதற்கு மேல் வேறென்ன வேண்டும். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடிக்க திரைப்படத்தை சிவா இயக்கியுள்ளார்.

ஜெய் பீம்

ஜெய் பீம்

நெஞ்சை கனக்கச் செய்யும் கதையுடன் வெளியாகி இருக்கிறது, சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பிலான ஜெய்பீம். ஒடுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் துயரத்தை தொட்டுத் தொடரும் ஒரு சட்டப் போராட்டத்தின் வழியே கதை செல்கிறது. பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டி வரும் இந்த திரைப்படத்தை ஒட்டிய சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. தவறவிடக்கூடாத இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகி உள்ளது. பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் உள்ளிட்டோர் உடன் நடித்த திரைப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார்.

எனிமி

எனிமி

விஷால்-ஆர்யா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் பட்டாசாக வெளியாகி இருக்கிறது எனிமி. பால்யத்து நண்பர்கள் இருவர் காலத்தின் கோலத்தால் எதிரெதிர் எனிமி ஆகிறார்கள். இதில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை விட, திரையில் நடக்கும் சிறப்பான எலியும் பூனையும் ஆக்‌ஷன் விளையாட்டே எனிமியை ரசிக்கச் செய்கிறது. பிரகாஷ் ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். நேரடி திரையரங்கு வெளியீடாக தீபாவளியன்று எனிமி வெளியாகி உள்ளது.

எம்ஜிஆர் மகன்

எம்ஜிஆர் மகன்

சராசரி கிராமத்தானின் வீட்டில் எழும் தனிப்பட்ட பிரச்சினைகளும், ஊரை சூழும் பெரும் பிரச்சினையும் அவனை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன. ஒற்றை வரியில் சீரியசான கதையாக தோன்றினாலும், இயக்குநர் பொன்ராம் தனது பாணியில் காமெடி கலந்திருக்கிறார். எம்ஜிஆர் மகனாக சசிக்குமார், அவரது தந்தை எம்ஜிஆராக சத்யராஜ் ஆகியோருடன், சமுத்திரக்கனி தனது தத்துவ முத்துகளை ஒதுக்கிவிட்டு காமெடி கச்சேரியில் கலகலக்கிறார். சசிக்குமார் ஜோடியாக மிருணாளினி வருகிறார். திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

வா டீல்

வா டீல்

களத்தில் அண்ணாத்த இறங்குவதால் திரையங்கு கிடைக்காது, வசூல் பாதிக்கும் என பல திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸ் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டன. ஆனால், வெளியாவதே சாதனையாக தவித்து வந்த ஒரு திரைப்படம் தயங்காது கோதாவில் குதித்திருக்கிறது. அருண் விஜய், கார்த்திகா நடிப்பில் ரத்தின சிவா இயக்கிய வா டீல் திரைப்படம்தான் அது. சுமார் 8 வருடங்களாக இழுத்தடிப்பில் இருந்த இந்த திரைப்படம், ஒரு வழியாக தீபாவளியன்று திரையரங்கை எட்டியுள்ளது.

x