நலம்பெற பிரார்த்தனை செய்தோருக்கு நன்றி: நடிகர் ரஜினிகாந்த் குரல் பதிவு


அக்.28 அன்று உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். தலைசுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு மூளைக்கான ரத்த நாளத்தில், கழுத்துப் பகுதியில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தொடர் மருத்துவ பராமரிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பின்னர், ரஜினியின் உடல்நலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஞாயிறு(அக்.31) இரவு அவர் தனது வீட்டுக்குத் திரும்பினார்.

மகள் சௌந்தர்யா அண்மையில் தொடங்கி இருந்த, குரல்வழி சமூக ஊடகமான ‘ஹூட்’ வாயிலாக தான் வீடு திரும்பிய தகவலை ரஜினிகாந்த் அறிவித்தார்.

அவரது அந்தக் குரல் பதிவில். “அனைவருக்கும் வணக்கம். சிகிச்சை முடிந்தது. நான் நல்லா இருக்கேன். இரவுதான் வீட்டிற்கு வந்தேன். என்னுடைய ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நலன் குறித்து விசாரித்த நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

ஹூட் குரல் பதிவோடு, திறந்த கதவின் முன்பாக வீட்டுக்குள் நுழையும் தனது புகைப்படத்தையும் ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கிறார்.

x