'ஒரே நிகழ்ச்சி... ஓகோ புகழ்' என்றால், அது பவித்ரா லட்சுமிக்கும் பக்காவாய்ப் பொருந்தும். ஆம், ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு அனைவரையும் அதிரடியாகக் கவர்ந்தவர் இவர். ஆனால், அதற்கு முன்பே, உங்களில் யார் அந்த பிரபுதேவா?, மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் பட்டையைக் கிளப்பியவர். தற்போது மலையாளப் பட உலகில் 'உல்லாசம்' படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் பவித்ரா லட்சுமி, கோலிவுட்டிலும் தனது கொடியை நாட்டி, 'நாய் சேகர்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கதிருடன் ‘யூகி’ என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் அவர் காமதேனு வார இதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
உங்களைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள்…
எனது குடும்பம் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நான் பகிர விரும்பவில்லை. நான் கோவைப் பெண். படித்து வளர்ந்தது எல்லாம் அங்கேதான். அம்மாவின் வளர்ப்பில் உருவாகி வளர்ந்தவள் நான். 2 டிகிரிகள் முடித்திருக்கிறேன். கோவையில் வணிகவியல் படித்தேன். சென்னையில் ஃபேஷன் டிசைனிங் முடித்தேன்.
பவித்ரா லட்சுமி என்றாலே நடன நிகழ்ச்சிகளில் திறமையைக் காட்டியவர் என்று சேனல் ரசிகர்களுக்கு தெரியும். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் உங்களது பயணம் பற்றி கூறுங்கள்...
3 வயதிலேயே பரத நாட்டியம் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். முறையாக நடன அரங்கேற்றம் செய்திருக்கிறேன். டிவி நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பரதம், வெஸ்டர்ன் இரண்டிலுமே பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருக்கிறேன். 2010-ல் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியில் டாப் 5 பங்கேற்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் பின்னர், அழகிப் போட்டிகள், பிரின்ட் மற்றும் வீடியோ மாடலிங், ராம்ப் வாக் மாடலிங் என பிஸியாக இருந்தேன். அப்போதுதான் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றேன். அதன் பின்னர் தேசிய அளவிலான பல தயாரிப்புகளுக்கு மாடலிங் செய்தேன். சர்வதேச நடன நிகழ்ச்சிகளுக்கு கோரியோகிராபி செய்திருக்கிறேன். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது.
‘நாய் சேகர்’ படத்துக்கு முன்பே மலையாளப் பட உலகில் அறிமுகமானீர்கள்.. அந்தப் படம் என்னவாயிற்று?
ஆமாம் முன்னணி ஹீரோ, முன்னணி நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட் என்று எல்லாமே சிறப்பான அறிமுகமாக அமைந்தது. தியேட்டரில் வெளியிட வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக உல்லாசம் படம் காத்திருக்கிறது. சினிமாவில் அறிமுகமான பிறகு திரும்பவும் தொலைக்காட்சிக்கு செல்வதில்லை என்ற முடிவுடன் தான் இருந்தேன். நம் வாழ்க்கையில் திருப்பம் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. குக் வித் கோமாளி அப்படித்தான் அமைந்தது.
‘குக் வித் கோமாளி’ வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கரோனா காலத்தில் நாமெல்லாம் சிரிப்பதையே மறந்து போய் இருந்தோம். வாழ்க்கை அடுத்து எப்படிச் செல்லும் என்று நாம் அனைவருமே சீரியஸாக எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், வாழ்க்கையை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாமே என்று ஒரு ஐஸ் பிரேக்கராக இருந்ததால்தான், அந்த நிகழ்ச்சி இத்தனை பெரிய வெற்றி பெற்றது. ஒரு சமையல் நிகழ்ச்சியை அவுட் அண்ட் அவுட் நகைச்சுவை நிகழ்ச்சியாக பண்ண முடியும் என்று காட்டியது மட்டுமல்ல... எந்த அளவிற்கு சிரிப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு சீரியஸ் நிகழ்ச்சியாகவும் அமைந்ததும் வெற்றிக்கு இன்னொரு காரணம்.
தற்போது ‘நாய் சேகர் ’படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அனுபவம் எப்படி இருக்கிறது?
தமிழ் சினிமாவில் நான் வியக்கும் ஒரு நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். திறமைகளுக்கு அங்கே எப்போதும் ஆராதனை உண்டு. முழுவதும் எனது திறமையை நம்பி அதற்கு மரியாதை கொடுத்து அவர்கள் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். பெரிய கதைகள் கேட்டு அலுத்துப் போயிருந்த நேரத்தில் என்னை, கதை சொல்லி அசத்தினார் கிஷோர் ராஜ்குமார். அது மட்டுமல்ல... அத்தனை பெரிய நிறுவனத்தில் தன்னுடைய தெரிவாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினார். நான் அவரது ரசிகை. அவர் என்னுடைய ரசிகர் என்றார். திறமைகளை ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது இப்படித்தான்.
‘நாய் சேகர்’ படத்தில் திறமைகளின் உருவமான சதீஷ் அவர்களுடன் நடிப்பது பெருமை. அதைவிடப் பெருமை இந்தப் படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கை நான் மதிக்கும் சிவகார்த்திகேயன் வெளியிட்டது. எஸ்கே என்றால் இன்று ஒரு பிராண்ட். திறமையாலும் உழைப்பாலும் சிவகார்த்திகேயன் அதை உருவாக்கினார். அவரது வழியை பின்பற்ற விரும்புகிறேன்.
குக் வித் கோமாளியின் முதன்மைக் கோமாளியான புகழுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தால் நடிப்பீர்களா?
நல்ல கதை, நல்ல டீம் அமைந்தால், புகழ் என்ன யாரோடு வேண்டுமானாலும் நடிப்பேன்.
சினிமாவுக்கு வெளியே இசை காணொலிகளிலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறீர்களே?
இன்று, தனி இசை என்பது மிகப்பெரிய சந்தையாகவும் புதிய திறமைகளுக்கான மேடையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதில் பங்கெடுப்பதில் எல்லோருமே போட்டி போடத் தொடங்கியிருக்கிறார்கள். 'கண்ணாம்மா என்னம்மா' தனியிசை பாடல் எனக்கு நண்பர்கள் அமைத்துத் தந்த வாய்ப்பு. அதேபோல் எனக்கு குறும்படங்களும் திருப்புமுனையாக அமைந்தன. அதில், அஷ்வினுடன் இணைந்து செய்த ' 3 சீன்ஸ் ' என்ற குறும்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெற்ற ஹலோ சீனியர் என்ற வசனம், இளைஞர்களின் மீம்களில் இடம்பெற்றது. தனி இசையில் பங்கேற்பதும், அதற்கு பிரம்மாண்டமாக இசை வெளியீடு நடத்துவதும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.