சாதி, மதம், கடவுள், இடஒதுக்கீடு, வர்க்கப் பிரச்சினை இப்படி சமூகத்தின் சர்ச்சைக்குரிய சகலத்தையும் கலந்துகட்டி ஒரு படம் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, விடைதேடும் மற்றுமொரு முயற்சியே ‘என்னங்க சார் உங்க சட்டம்?’ திரைப்படம்.
அன்றாடம் நிகழும் முக்கிய சமூகப் பிரச்சினைகளை ஒரே திரைப்படத்தில் எடுக்க வேண்டும் என்பது, இயக்குநர் பிரபு ஜெயராமின் தணியாத ஆசை போலும். அப்படி புரட்சிகரமான கருத்துகளைத் திரைப்படம் எனும் பொழுதுபோக்கு தளத்தில் புகுத்தினால், அதை ஒட்டுமொத்தமாய் மக்கள் புறக்கணித்துவிடுவார்களோ என்ற தயக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது. அதனால் மேலோட்ட ரசனைக்கு ஒன்றுமாய், உள்ளார்ந்த விசாரணைக்கு மற்றொன்றுமாய் 2 கதைகளை ஒரே திரைப்படத்தில் வைத்திருக்கிறார். அது தொடர்பான விளக்கத்தையும் இயக்குநரே திரைப்படத்தின் தொடக்கத்தில் சொல்லிவிடுகிறார்.
ஒரு படம்; 2 கதை
அப்படி புதுமையான முயற்சிக்கு ’ட்யூப்லெக்ஸ்’ உத்தியைக் கையாண்டிருக்கிறார். ஓடிடியில் பிரபலமான ஆந்தாலஜி, ஹைப்பர்லிங் வரிசையில் இந்த ட்யூப்லெக்ஸ் பயன்படுத்தப்பட்டாலும், ஏற்கெனவே வழக்கில் இருக்கும் உத்திதான் இது. ‘ஒரு வீடு இரு வாசல்’ போன்ற முன்னுதாரணங்களும் உண்டு. ஒரே படத்தில் 2 வெவ்வேறு கதைகள் இடம்பெற்றாலும், அவை ஏதோ ஒரு புள்ளியில் தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
படத்தின் 2 கதைகளும், முதல் மற்றும் 2-ம் பாதிகளில் அடங்குகின்றன. முதல் பாதியில் காதலும் காமெடியுமான ஜனரஞ்சக ஜாலி கதையும், 2-ம் பாதியில் நடப்பு அவலங்கள் பலவற்றைத் தோலுரித்து, நாட்டின் சட்டத்தையும் சற்று உலுக்க முயற்சிக்கும் சமூகக் கதையும் இடம்பெறுகின்றன.
காதல், காமெடியில் முதல் கதை
படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லும் ஆவலோடு அறிமுக இயக்குநர் செல்கிறார். அவரது இன்னொரு கதையைத் திருடிய மோசடி நண்பனும் அங்கே கதை சொல்ல வருகிறான். இருவரும் ஒரே கதைக்கு உரிமை கொண்டாட, தயாரிப்பாளர் மதியூகத்துடன் பஞ்சாயத்து செய்கிறார். கதையின் முடிச்சுகளையும் நம் சார்பாக இயக்குநரிடம் கேள்வியெழுப்பி விடுவிக்கிறார். இந்தக் களேபரத்தை மையமாகக் கொண்டு முன்னும், பின்னுமாக 2 கதைகள் விரிகின்றன. முதல்பாதி கதை விடலைத்தனத்தின் சகல குணாதியசங்களுடன் சொல்லப்படுகிறது.
நண்பர்களோடு ஊதாரியாகச் சுற்றும் இளைஞன், சாதி வெறி தந்தையைப் பழிவாங்க வேற்று சாதி மதத்தில் காதல் மணம் முடிக்க விரும்புகிறான். காதல் என்ற பெயரில் அவன் வரிசையாக வீழ்த்தும் பெண்கள், அவர்களோடான குலாவல்கள்... என இளைஞர்களைக் குறிவைத்து காட்சிகள் செல்கின்றன. சாதி, மதம், வர்க்கம் என சமூகத்தின் வேறுபாடுகளுடன் அவன் சுலபமாய் சமரசமாகவும் செல்கிறான். இந்தக் கதையோட்டம் முழுக்க பகடியாகச் சொல்லப்படுவது தாமதமாகவே புரிகிறது. அந்த வகையில் பின்பாதியின் கருத்தையும் முன்பாதியிலும் சற்று பிரதிபலித்திருக்கிறார்கள்.
சமூக அவலங்களைச் சாடும் பின்பாதி
2-ம் பாதியில், இருவேறு இடங்களில் நடக்கும் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வை மையமாகக் கொண்டு கதை செல்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொழிலாளர் நலத் துறைக்கான உதவி இயக்குநர் பணி, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயிலின் அர்ச்சகர் பணி ஆகியவைக்கான இறுதிச் சுற்று நடக்கிறது. இந்த 2 இடங்களிலும் பணியை அடைவதற்காக அரங்கேறும் அவலங்கள், அடிமட்டச் சமூகத்தின் பாடுகள் ஆகியவற்றை அலசுகிறார்கள்.
மிகவும் வறட்சியாக வந்திருக்க வேண்டிய இந்தக் காட்சிகள், நடைமுறை சமூகப் பிரச்சினைகளைத் தொட்டுத் துலங்கியதில் விறுவிறுவென அப்படியொரு வேகத்தில் செல்கின்றன. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு அறிவித்திருந்தபோதும், நடைமுறையில் நடப்பது என்ன என்பதைத் துணிச்சலாகப் பதிவு செய்திருக்கிறார்கள். எவரையும் புண்படுத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், சாதியமைப்பின் படிநிலைகளோடு, எல்லா சாதிகளிலும் படிந்திருக்கும் உயர்வு தாழ்வையும் அம்பலப்படுத்துகிறார்கள்.
இடஒதுக்கீடு, வறுமை ஒழிப்புத் திட்டமா?
டிஎன்பிஎஸ்சி மற்றும் அறநிலையத் துறை தொடர்பான காட்சிகள் முழுக்கவும் கற்பனையே என உஷாராக முன்கூட்டியே அறிவித்துவிடுகிறார்கள். இத்துடன் சாதி, மதம், கடவுள் பற்றிய காட்சிகளுக்குமான பொறுப்புத் துறப்பையும் படத்தின் தொடக்கத்திலேயே முன்வைத்துவிடுகிறார்கள். இத்துடன், சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்சினைகளைப் பொறுப்பற்று கையாண்டதையும், பொறுப்புத் துறப்பில் சேர்த்திருக்கலாம். மேலடுக்கில் மெச்சும்படியான கதையின் உள்ளடுக்கில் போதாமையின் அபத்தங்களும் பல்லிளிக்கின்றன. சாதி வேறுபாடுகளைச் சாடுவதிலும், சமூகத்தின் வர்க்க பாகுபாடுகளை வெளிப்படுத்திய வகையிலும், இந்தத் திரைப்படம் பல துணிச்சலான கருத்துகளை முன்வைத்திருக்கிறது. ஆனால், இடஒதுக்கீடு என்பதை அரைகுறைப் புரிதலோடு அணுகிய விதம் அபாயகரமானது. அந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக, இடஒதுக்கீடு என்பதை வறுமை ஒழிப்புத் திட்டமாக இப்படத்தில் முன்னிலைப்படுத்துகிறார்கள்.
இடஒதுக்கீட்டு நடைமுறையால், சமூக அடுக்கின் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தையும் படம் வலியுறுத்துகிறது. அந்த வகையில் பொதுப்புத்தியின் மேலோட்ட உணர்வுகளைக் கிளறிவிடும் வாட்ஸ்-அப் பகிர்வுகளை விஸ்தீரணம் செய்து, திரைப்படமாக்குவதன் வரிசையில் இந்தத் திரைப்படமும் தேங்கிவிடுகிறது. நடுநிலையின் பெயரில் இடம்பெறும் பிற்போக்கான சில வசனங்கள், காட்சிகளைக் கடக்கும்போது, ‘என்னங்க சார் உங்க திட்டம்?’ என இயக்குநரைக் கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
நெஞ்சில் தைக்கும் வசனங்கள்
இந்த இடஒதுக்கீடு சறுக்கலுக்கு அப்பால், இதர சமூக அவலங்களைத் துவைத்தெடுத்ததில், மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில் எ.சா.உ.ச., தனியாவர்த்தனம் வாசித்திருக்கிறது. இடித்துரைக்கப்படும் சமூகத்தினரே ரசிக்கும்படி தங்கள் சாடலை முன்வைத்திருக்கிறார்கள். டிஎன்பிஎஸ்சி நேர்முகம், அர்ச்சகர் பணித்தேர்வு என 2 இடங்களில், 2-வதில் நடக்கும் கலாட்டாக்கள் கலகலப்பாகச் செல்கின்றன. முதல் பாதியின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், 2-ம் பாதியில் வேறாக உருக்கொள்வது அருமையான கற்பனை. வெகுஜன மனக்குமுறல்கள் பலவற்றைக் கூர்மையான வசனங்களாக நெஞ்சில் தைத்திருக்கிறார்கள். திரையரங்கில் வெளியாகி இருப்பின் இந்த வசனங்களுக்காகவே விசில் பறந்திருக்கும்.
கவுதம் மேனன் பாணியிலான வாய்ஸ் ஓவரும் கதைக்கு உதவுகிறது. குணா பாலசுப்பிரமணியன் இசையில் ‘என் ஜீரக பிரியாணி’ பாடல் கேட்டவுடன் ஒட்டிக்கொள்கிறது. பறவை பார்வையிலான கோயில் காட்சிகளில் அருண்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. துணிச்சலான கதையிலும், அதைச் சொல்லிய விதத்திலும் இயக்குநர் பிரபு ஜெயராம் தனித்து நிற்கிறார். நாயகனாக வரும் ஆர்.எஸ்.கார்த்திக், நடிப்பதற்கான வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ரோகிணி, ஜூனியர் பாலையா, சாய்ரா, சௌந்தர்யா மற்றும் சில யூடியூப் பிரபலங்கள் உடன் நடித்துள்ளனர். சோனி லிவ் தளத்தில் இத்திரைப்படம் வெளியாகி உள்ளது.
சமூகத்தை ஆட்டிப்படைக்கும் அவலங்களை எடுத்துக்கொண்டதிலும், அவற்றை ஒரு பொழுதுபோக்கு ஊடகத்தில் திறமையாகக் கூராய்வு செய்ததிலும் ’என்னங்க சார் உங்க சட்டம்?’ முன்னிற்கிறது. ஆனால், பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைக்கும் முனைப்பில் சறுக்கி இருக்கிறது.