ஒரு திரைப்படத்தைப் பற்றிய செய்தி வந்ததும், “யார் ஹீரோ-ஹீரோயின்?” என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனால், அந்தக் கேள்வி ஏன், "யார் ஹீரோயின், யார் ஹீரோ" என இருப்பதில்லை? திரைப்படம் என்றாலே, ஆண்தான் பிரதான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி உலக அளவில் பரவிக் கிடப்பதே காரணம். உலக அளவிலும் பெண்களை மையமாகக் கொண்டு பல சூப்பர் ஹீரோ கதைகள், வணிகரீதியாகப் பெரும் வசூலைக் குவித்துவருகின்றன. தமிழிலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வெற்றியடைகின்றன. ஆனால், சினிமா உருவாகி சமூகத்தின் மையநீரோட்டத்தில் கலக்க ஆரம்பித்த காலகட்டங்களில், பெண் கதாபாத்திரங்களைப் பிரதானப்படுத்தும் வணிக ரீதியான சினிமாக்கள் வெகு அரிது.
பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களையும் வணிகரீதியான வெற்றி திரைப்படங்களாக உருவாக்கலாம் என்று சினிமாவின் ஆரம்பகட்டத்திலேயே சாதித்துக் காட்டிய சிலரில், கேயார்க் வில்கெல்ம் பேப்ஸ்ட் (சுருக்கமாக ஜி.டபிள்யூ.பேப்ஸ்ட்) முக்கியமானவர்.
சிறைக்குள் நாடகக் கலை
செக் குடியரசில் உள்ள பொலிவியாவில், 1885 ஆகஸ்ட் 25-ல் பிறந்தார் பேப்ஸ்ட். தந்தை ரயில்வே துறை அதிகாரியாகப் பணிபுரிய, இளமைக் காலங்களைச் செழிப்புடன் கழித்தார். ஆரம்பக்காலப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, வியன்னாவில் அகாடமி ஆஃப் டெக்கரேட்டிவ் ஆர்ட்ஸ் கல்லூரியில் நாடகக்கலையைப் படித்துத் தேர்ந்தார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, மேடை நாடக நடிகராகத் தன் கலை வாழ்க்கையை ஆரம்பித்தார். சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் பணியாற்றினார். 1910-ல் அமெரிக்கா வந்த பேப்ஸ்ட், நியூயார்க் நகரிலிருந்த ஜெர்மன் தியேட்டரில் நாடக நடிகராகவும், நாடக வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார்.
முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்பு ஐரோப்பா திரும்பிய பேப்ஸ்ட், சிறைக் கைதிகளுக்கான முகாமில் அடைக்கப்பட்டார். அந்த முகாமிலும் சக கைதிகளை ஒன்றிணைத்து ஒரு நாடகக் குழுவை உருவாக்கி, கைதிகளுக்காக நாடகம் நடத்திவந்தார். சிறை முகாமிலிருந்து விடுதலையானதும், வியன்னா திரும்பிய பேப்ஸ்ட், சில நாடக நிறுவனங்களில் நாடக இயக்குநராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.
முதல் திரைப்படம்
அக்காலகட்டத்தில், ஜெர்மனியில் பிரபல இயக்குநராக இருந்த கார்ல் ஃப்ரோலெக், நாடகங்களில் பரிமளித்துக்கொண்டிருந்த பேப்ஸ்டின் திறமையைக் கண்டு வியந்தார். தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றவும் அழைத்தார். மேடை நாடகத்தை இயக்கிப் பழக்கப்பட்டிருந்த பேப்ஸ்ட், திரைப்படங்களை எப்படி இயக்குவது, கேமராவைக் கையாளுவது எப்படி, திரைக்கதை எழுதுவது எப்படி என்பது போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தார். 1923-ல், ‘தி ட்ரெஷர்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆட்டமன் அரசாட்சியில் புதைத்துவைக்கப்பட்ட ஒரு புதையலை மையமாகக் கொண்டு, அழகான காதல் கதையாக உருவான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 1925-ல் இயக்கிய ‘தி ஜாய்லெஸ் ஸ்ட்ரீட்’ என்ற திரைப்படத்தில், ஜெர்மனியில் ஏற்பட்ட பணவீக்கத்தின்போது பாதிக்கப்படும் 2 பெண்களை மையமாகக் கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருப்பார். அக்காலகட்டத்தில், ஜெர்மனியில் பிரபலமாக இருந்த எக்ஸ்ப்ரஷனிச கருத்தியலுக்கு நேரெதிரான ‘நியூ ஆப்ஜெக்டிவிட்டி’ கருத்தியலைப் பின்பற்றி முதன்முதலில் உருவான திரைப்படம் அது.
‘நியூ ஆப்ஜெக்டிவிட்டி’
எக்ஸ்ப்ரஷனிச கருத்தியலில் உருவாகும் திரைப்படங்கள் உண்மை வாழ்விலிருந்து வெகுவாக விலகி, கோணல்மாணலான பின்னணியையும், அதீத உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களையும் கொண்டதாகவும் இருக்கும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட யதார்த்தமான கதைமாந்தர்கள், பிரச்சினைகளை உள்ளது உள்ளபடி சொல்லும் திரைக்கதை, எளிமையான/தெளிவான கேமரா நகர்வுகள் மூலம் கதை சொல்லும் வடிவமே ‘நியூ ஆப்ஜெக்டிவிட்டி’. பேப்ஸ்ட் தன் பல திரைப்படங்களை இந்த வடிவிலேயே உருவாக்கினார். அவருடைய ‘சீக்ரெட் ஆஃப் தி சௌல்’ (1926), ‘தி லவ் ஆஃப் ஜீயின் நே’ (1927), ‘வெஸ்ட்ஃபிரன்ட் 1918’ (1930) ஆகிய திரைப்படங்கள் ‘நியூ ஆப்ஜெக்டிவிட்டி’ கருத்தியல் சினிமாவுக்கு நல்ல உதாரணங்கள்.
நவீனச் சிந்தனையும் விமர்சனங்களும்
தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி வந்த பேப்ஸ்ட், 1929-ல் ‘பண்டோராஸ் பாக்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். உலகின் தலைசிறந்த திரைப்படங்களின் வரிசையில் இப்படத்துக்கும் ஓர் இடமுண்டு. நட்பு, பாலியல் உறவு என அனைத்திலும் வெகுளியான ஒரு பெண்ணின் வாழ்வில், அவளுடைய குணாதிசயங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் வெளியானபோது பெரும் எதிர்வினைகளைச் சந்தித்தது. ஜெர்மனியில் பிரபலமாக இருந்த ‘பண்டோராஸ் பாக்ஸ்’ என்ற மேடை நாடகத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், பல நவீன மாற்றங்களைச் செய்திருந்தார் பேப்ஸ்ட். முக்கியமாக, படத்தின் பிரதான கதாபாத்திரமான லூலூ கதாபாத்திரத்தை அவர் வடிவமைத்த விதம், அக்காலகட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அந்தக் கதாபாத்திரத்தில் அமெரிக்க நடிகையான லூயிஸ் ப்ரூக்ஸை நடிக்கவைத்ததால், ஜெர்மானிய சினிமா விமர்சகர்கள் இத்திரைப்படத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். லூலூ மேல் ஈர்ப்பு கொள்ளும் ஒரு பெண் கதாபாத்திரம், தன்பால் ஈர்ப்புக் காதலைப் பிரகடனப்படுத்தியதும் எதிர்ப்புகளுக்கு இன்னுமொரு காரணம்.
ஆண்கள் ஆதிக்கம் செய்யும் இச்சமூகத்தில், ஒரு பெண்ணின் இருப்பு எவ்வளவு போராட்டமானது என்பதைப் பதிவுசெய்த இத்திரைப்படம், கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பல காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு, அதனுடைய உண்மைத்தன்மை சிதைக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. வெளியான புதிதில் தோல்வியைச் சந்தித்தாலும் ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து, சினிமா ஆர்வலர்களால் இத்திரைப்படம் மீண்டும் கண்டறியப்பட்டு, இதன் கலைத்தன்மை 1950-களில் அங்கீகாரம் பெற்றுப் போற்றுதலுக்கு உள்ளானது.
ஜோசப் கோயபெல்ஸ்
வசன திரைப்படங்கள் வர ஆரம்பித்த பிறகு, ‘வெஸ்ட்ஃப்ரன்ட் 1918’ (1930), ‘தி த்ரீ பென்னி ஓபெரா’ (1931), ‘காமராட்ஷாஃப்ட்’ (1931) என்ற 3 திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி ‘பண்டோராஸ் பாக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் விமர்சனத்துக்குள்ளான தனது பெயரை மீட்டெடுத்தார் பேப்ஸ்ட். ஆரம்ப நாட்களில் அமெரிக்காவில் பணிபுரிந்ததால், அவருக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி ‘எ மார்டன் ஹீரோ’ (1934) என்ற ஹாலிவுட் திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து, பிரான்சிலும் ‘ஸ்ட்ரீட் ஆஃப் ஷாடோவ்ஸ்’ (1937) என்ற பிரெஞ்சு திரைப்படத்தையும் இயக்கினார். ஹிட்லரின் நாஜி படை ஜெர்மனியைத் தன் கட்டுக்குள் கொண்டுவர ஆரம்பித்ததும், அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்ல எண்ணியிருந்த பேப்ஸ்ட், 1939-ல் போர் தொடங்கியதும் தப்பிச் செல்ல வழி இல்லாமல் ஜெர்மனிக்கு நாஜி படைகளால் அனுப்பிவைக்கப்பட்டார். ஹிட்லரின் பிரதான கொள்கைப் பரப்பு அமைச்சரான ஜோசப் கோயபல்ஸ் மேற்பார்வையில், ‘காமெடியன்ஸ்’ (1941) மற்றும் ‘பராசெல்சஸ்’ (1943) போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
ஹிட்லரின் மரணத்துக்குப் பின்...
1945-ல் ஹிட்லர் இறந்த பிறகு, ‘தி லாஸ்ட் டென் டேய்ஸ்’ (1955) என்ற திரைப்படத்தில் ஹிட்லர் கதாபாத்திரத்தை இடம்பெறச் செய்தார் பேப்ஸ்ட். 2-ம் உலகப்போருக்குப் பின்பு, ஹிட்லரை ஒரு கதாபாத்திரமாகக் காட்சிப்படுத்திய முதல் ஜெர்மன் திரைப்படம் என்ற சிறப்பு இப்படத்துக்கு உண்டு. ஹிட்லரின் கடைசி நாட்களைக் கலை நேர்த்தியுடன் பேப்ஸ்ட் காட்சிப்படுத்தி இருப்பார். ஆஸ்திரிய நடிகரான அல்பின் ஸ்கோடா, ஹிட்லர் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். போரைப் பின்னணியாகக் கொண்டு உருவான உலக சினிமாக்களில் ‘தி லாஸ்ட் டென் டேய்ஸ்’ திரைப்படம் முக்கியமானதாகும். 1955-ம் ஆண்டு பேப்ஸ்ட் இயக்கிய ‘ஜாக்பூட் ம்யூட்னி’ என்ற திரைப்படத்தில், ஹிட்லரைக் கொல்ல 1944-ல் போடப்பட்டுத் தோல்வியடைந்த சதித் திட்டமான ‘ஆப்ரேஷன் வல்கைரி’-யைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் திரைமொழியுடன் உருவாக்கினார்.
தந்திரமான இயக்குநர்
தன் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களிடையே நிஜவாழ்விலிருக்கும் உறவு, நட்பு, பகைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கதாபாத்திரங்களின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றுவதில் கைதேர்ந்த ஒரு இயக்குநராகத் திகழ்ந்தார் பேப்ஸ்ட். உதாரணத்துக்கு, ‘பண்டோராஸ் பாக்ஸ்’ திரைப்படத்தில் லூலூ கதாபாத்திரத்தில் நடித்த லூயிஸ் ப்ரூக்ஸுக்கும் அத்திரைப்படத்தில் லூலூவால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முயலும் டாக்டர் லூட்விக் கதாபாத்திரத்தில் நடித்த ஃப்ரிட்ஸ் கோர்ட்னருக்கும் நிஜ வாழ்க்கையில் பகைமை இருந்தது. ப்ரூக்ஸின் அமெரிக்கப் பின்னணி மற்றும் அவர் பேப்ஸ்டிடம் நெருங்கிய நட்பில் இருப்பதையும் நிஜவாழ்வில் வெறுத்தார் கோர்ட்னர். தன் கதாபாத்திரத்துக்குக் கொடுக்கப்படும் வசனங்களைத் தவிர, ப்ரூக்ஸிடம் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு வார்த்தைகூட அவர் பேசமாட்டாராம். இந்த பகைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பேப்ஸ்ட், திரையில் லூலூ கதாபாத்திரத்தின் மேல் லூட்விக் காட்டும் வெறுப்பை மிகத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.
அந்த வெறுப்பு கதாபாத்திரங்களுக்கு இடையே உண்டான வெறுப்பல்ல, அது நடிக்கும் நடிகர்களுக்கு இடையேயான வெறுப்பு. ஆனால், அதைத் திரைப்படத்துக்கு எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதில் ஆதாயம் பார்க்கும் சாதுரியமான இயக்குநராக இருந்தார் பேப்ஸ்ட். தன் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட குணாதிசயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அதற்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை வடிவமைத்ததால்தான் அவர் திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் காலத்தால் நிலைத்து நிற்கின்றன.
இறுதியாக, ‘த்ரூ தி ஃபாரஸ்ட்ஸ் அண்ட் த்ரூ தி ட்ரீஸ்’ (1956) என்ற திரைப்படத்தை இயக்கிய பின் திரையுலகிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார் பேப்ஸ்ட். 1967 மே 29-ம் தேதி, தன்னுடைய 81-வது வயதில், முதிர்வின் காரணமாக வியன்னாவில் மரணமடைந்தார் அந்தத் திரை மேதை!