புனித் ராஜ்குமார் என்னும் ராஜகுமாரன்


புனித் ராஜ்குமார்

பிரபு நடித்த ‘ராஜகுமாரன்’ திரைப்படத்தில், பிரபு பிறந்த பின்பு ஊரில் உள்ள அனைவரும் அவரின் கன்னக்குழி சிரிப்பை பார்த்துவிட்டுத்தான் வேலைக்குச் செல்வதைப் போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். அதேபோல்தான் பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகனாகப் பிறந்த புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையும். புனித் பிறந்த பின்னர்தான், தன் வாழ்க்கை மாறியதாக ராஜ்குமார் குறிப்பிடுவார். புனித் ராஜ்குமார் பிறந்த பின்னர்தான் சென்னையில் மையம் கொண்டிருந்த கன்னட திரையுலகம் பெங்களூருக்கு மாறியது. தன்னுடைய 6-வது வயதுவரை சென்னையில்தான் வளர்ந்தார் என்பதால், தமிழும் சரளமாகத் தெரியும் புனித் ராஜ்குமாருக்கு.

‘பெட்டாடா ஹூவு’ (1985)

புனித் ராஜ்குமார் முதலில் வெள்ளித்திரையில் தோன்றிய பொழுது, அவர் 6 மாதக் கைக்குழந்தை. அந்த வகையில் சிம்புக்கு முன்னோடி இவர்தான். ‘பிரேமத கனிகே’ (1976) என்னும் திரைப்படத்தில் 6 மாத கைக் குழந்தையாக நடிக்கவைக்கப்பட்டார் புனித். தொடர்ந்து தன்னுடைய 12-ம் வயதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், 1985-ல் ‘பெட்டாடா ஹூவு’ என்னும் திரைப்படத்தில், ராமு என்கிற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகக் குழந்தை நட்சத்திரமாகத் தேசிய விருது பெற்றார்.

’அப்பு’ (2002)

அதற்குப் பிறகு நடிக்காமலிருந்த புனித், 2002-ல் தன்னுடைய 27-வது வயதில் அறிமுகமான திரைப்படம்தான் ‘அப்பு’. தெலுங்கு மசாலாப் பட இயக்குநரான பூரி ஜெகந்நாத்தின் 2-வது திரைப்படம் இது. நம் ஊரில் ‘தம்’ என்று சிம்பு நடித்து வெளிவந்ததே, அந்த திரைப்படத்தின் அசல் பதிப்புதான் ‘அப்பு’. கர்நாடகா முழுக்க தாறுமாறாக ஓடி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தது. அன்று முதல் புனித் ராஜ்குமார் “அப்பு” என்றே செல்ல பெயருடன் அழைக்கப்பட்டு வந்தார். அதற்குப் பிறகு, ‘அபி’, ‘வீர கன்னடிகா’ என பல திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு ‘ஒக்கடு’-வின் ( நம்ம ஊரு கில்லி) கன்னடா ரீமேக்கான ‘அஜய்’ (2006) திரைப்படத்தில் நடித்தவரும் இவர்தான். 2007-ம் ஆண்டு ‘மிலனா’ திரைப்படத்தில் நடித்ததற்காகக் கன்னட அரசின் சிறந்த நடிகர் விருது பெற்றார். இந்தத் திரைப்படத்தின் சாயலை, நமது அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் உணரலாம்.

‘மிலனா’ (2007)

புனித் ராஜ்குமாரின் அண்ணன் சிவ ராஜ்குமார் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்த போதிலும், அண்ணனின் சாயல் துளியும் இல்லாமல், அவரது நிழலிலும் மறைந்துவிடாமல் தனித்துவமான நடிப்பில் மக்கள் மனதில் இடம்பிடித்தார் புனித்.

‘ராஜகுமாரா’ (2017)

2010-ல் இவர் நடித்த ‘ஜாக்கி’ திரைப்படம், இவரைப் புகழின் உச்சியில் கொண்டுசென்று நிறுத்தியது. பாவனா உடன் இணைந்து நடித்த இந்த திரைப்படம், மிகப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, 2012-ல் ‘அண்ணா பாண்ட்’ திரைப்படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2015-ம் ஆண்டு இவர் நடித்த ‘ராணா விக்ரமா’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ஃபிலிம்ஃபேர் விருதுபெற்றார். ‘ராணா விக்ரமா’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் புனித் நடித்திருந்தாலும், படத்தில் ஒரு காட்சியில் கூட 2 கதாபாத்திரமும் சந்தித்துக் கொள்ளாத வகையில் வித்தியாசமான திரைக்கதை கொண்ட ஆக்சன் திரைப்படம் இது. 2017-ல் புனித் நடித்த ‘ராஜகுமாரா’ திரைப்படம், இவர் நடித்த திரைப்படங்களில் தனி வசூல் வேட்டை நடத்தியது. கர்நாடகாவில் ஒரு மாதத்துக்கும் மேலாக ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

கடைசித் திரைப்படமான ‘யுவரத்னா’

கடைசியாக இவர் சாயீஷாவுடன் இணைந்து நடித்த ‘யுவரத்னா’ திரைப்படம் வெளிவந்தது. அதுவும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகத் திரையரங்கங்களில் வெளியான ஒரே வாரத்தில், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது, ‘ராஜகுமாரா’ திரைப்படத்தில் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற புனித் ராஜ்குமார் - பிரியா ஆனந்த் ஜோடி, மீண்டும் ‘ஜேம்ஸ்’ என்னும் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து இருவரது நடிப்பிலும் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிக்கொண்டிருந்தது.

நடிகராக மட்டுமல்லாமல், பின்னணி பாடகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர் புனித் ராஜ்குமார். கன்னட சினிமாவில் புதிய கதை அம்சம் கொண்ட திரைப்படங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவந்தவர். ‘கவலுதாரி’ ( கபடதாரி தமிழில்), ‘மாயபஜார் 2016’ (தமிழில் நாங்க ரொம்ப பிசி) மற்றும் ‘ஃப்ரெஞ்ச் பிரியாணி’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

’கோடியாதிபதி’ நிகழ்ச்சியில் புனித் ராஜ்குமார்

நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் கன்னட பதிப்பான ‘கோடியாதிபதி’ நிகழ்ச்சியை தொகுத்து நடத்தியவர் புனித். மேலும் ‘அப் ஸ்டார்ஸ்’ என்னும் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார்.

மனைவி, மகள்களுடன் புனித் ராஜ்குமார்.

புனித் அவர்களுக்கு அசுவினி ரேவந்த் என்கிற மனைவியும், திரிதா மற்றும் வந்திதா என்கிற இரு மகள்களும் உண்டு. அனைத்து கன்னட மக்களும் கரோனா கட்டுப்பாடுகள் முடிந்து மீண்டும் தங்கள் அப்புவை ‘ஜேம்ஸ்’-ஆக கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், இன்று திடீரென்று மாரடைப்பால் புனித் ராஜ்குமார் இறந்தது, கன்னடத் திரையுலகை மிகுந்த அதிர்ச்சியிலும், துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்தத் துயரத்தில் நாமும் பங்கெடுப்போம்.

x