கன்னட திரையுலகின் 'பவர் ஸ்டார்' புனித் ராஜ்குமார் காலமானார்


புனித் ராஜ்குமார்

கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் காலமானார். இன்று பகல் 11.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் புனித் ராஜ்குமார். அங்கே, தீவிர சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமாரின் உயிர் பிரிந்தது.

46 வயதான புனித் ராஜ்குமார், கன்னட திரையுலகில் “பவர் ஸ்டார்” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். 1976-ம் ஆண்டு 6 மாத குழந்தையாக இருந்தபோதே குழந்தை நட்சத்திரமாக 'பிரேமத கனிகே' படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய புனித் ராஜ்குமார், 2002-ம் ஆண்டு ‘அப்பு’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ரசிகர் வெள்ளத்தில் புனித் ராஜ்குமார் (மைசூர்)

நடிப்பு மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகள் கொண்டவராகக் கன்னட திரையுலகில் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். 1976-ல் ஆரம்பித்த அவரது கலைப்பயணம் 45 வருடங்கள் தொடர்ந்து இன்றுடன் முடிவடைந்திருக்கிறது.

புனித் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை முன்பு குவியும் மக்கள்

புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்ததும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள், மருத்துவமனையின் முன் குவிந்தனர். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் மேலும் பல ரசிகர்கள் அங்கே திரண்டு வருகின்றனர். தற்போது அவருடைய உடல் அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்துவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

x