தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சூர்யாவுக்குத் தமிழ் சினிமாவில் முதல் வெற்றியாக அமைந்ததுதான், 2001-ம் ஆண்டு வெளிவந்த ‘நந்தா’ திரைப்படம். இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா, ராஜ்கிரண், கருணாஸ் நடிப்பில் வெளியான இத்திரைப்படம், தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் ’பிதாமகன்’ திரைப்படத்திலும் விக்ரமுடன் இணைந்து நடித்தார் சூர்யா. தற்போது 20 ஆண்டுகள் கழித்து பாலா - சூர்யா கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது.
இதுகுறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அந்த ட்விட்டர் பதிவில், தன் தந்தை சிவகுமார் மற்றும் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்” என்று தெரிவித்துள்ளார் சூர்யா.