ரூ.15 கோடி நஷ்டம்: சிம்பு மீது மைக்கேல் ராயப்பன் காவல் துறையில் புகார்


நடிகர் சிம்புவால், ரூ.15 கோடி நஷ்டம் அடைந்ததாக, படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படத்தை வெளியிட முடியாதபடி மிரட்டல் விடுக்கின்றனர்’ என சிம்புவின் தாய் உஷா, சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், அவரது வீட்டு முன் உண்ணாவிரதமிருப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நேற்று சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரில், “சிம்பு நடிப்பில், 2016-ல், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தைத் தயாரித்தேன். இந்த படத்தைச் சொன்னபடி சிம்பு நடித்துக் கொடுக்கவில்லை. படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில், படத்தை வெளியிடுங்கள். நஷ்டம் ஏற்பட்டால், அதற்கு ஈடாக, மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பேன் என, சிம்பு உறுதி அளித்தார். அவரை நம்பி, நானும் படத்தை வெளியிட்டேன்.படம் சரியாக ஓடவில்லை. 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

அதில், 12 கோடி ரூபாய் விநியோகஸ்தர்களுக்குத் தர வேண்டி உள்ளது. இதுபற்றி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். அப்போது தலைவராக இருந்த விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் விசாரித்தனர். அவர்களிடம் எனக்கு மீண்டும் படம் நடித்துத் தருவதாகச் சிம்பு உறுதி அளித்தார். சங்க நிர்வாகிகள் மாறிய பின், ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டார்.

இது தொடர்பாக, படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு விநியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்தேன். சங்க நிர்வாகிகள், நஷ்டத்தை ஈடுசெய்ய சிம்பு புதிய படத்தில் நடித்துக் கொடுப்பது பற்றித்தான், அவரது தாய் உஷாவிடம் கேட்டனர். மற்றபடிக் கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. உஷா பொய் புகார் அளித்துள்ளார். அதற்கு, அவரது கணவர் உடந்தையாக உள்ளார். என்னை ஏமாற்றிய சிம்பு, உஷா, டி.ராஜேந்தர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

x