67-வது தேசிய திரைப்பட விருது விழா ஹைலைட்ஸ்


67-வது தேசிய திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிக்கு சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. ‘அசுரன்’ திரைப்படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார். மேலும், தமிழ் திரைத்துறையிலிருந்து தயாரிப்பாளர் எஸ்.தாணு, வெற்றிமாறன், இமான், விஜய் சேதுபதி, பார்த்திபன், நாக விஷால் ஆகியோரும் தேசிய விருது பெற்றனர்.

குடும்பத்துடன் விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்:

இந்திய சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பாகப் பங்காற்றியதற்காக ரஜினிகாந்த்தைக் கவுரவித்து, அவருக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மாப்பிள்ளை தனுஷ், பேரக்குழந்தைகளுடன் கலந்து கொண்டார்.

‘அசுரன்’ திரைப்படத்துக்கு விருது:

இன்று(அக்-25) டெல்லியில் நடந்த 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு விழாவுக்குத் தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். தமிழில் சிறந்த திரைப்படமாகத் தேர்வான வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்துக்குக் கிடைத்தது. இந்த விருதைப் படத்தைத் தயாரித்த தாணு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார்.

தனுஷுக்கு தேசிய விருது:

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றார். அசுரன் திரைப்படத்தில் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

‘விஸ்வாசம்’ திரைப்படப் பாடலுக்கு விருது:

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது.

2 விருதுகளைப் பெற்ற ‘ஒத்த செருப்பு சைஸ் 7’:

பார்த்திபன் ஒருவர் மட்டுமே இயக்கி, அவர் ஒருவர் மட்டுமே நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்குத் தேர்வுக்குழுவின் சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதை நடிகர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார். மேலும், இத்திரைப்படத்தில் சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருது ஒலி வடிவைப்பாளர் ரசூல் பூக்குட்டிக்கு வழங்கப்பட்டது.

‘சூப்பர் டீலக்ஸ்’ - விஜய் சேதுபதிக்கு விருது:

‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய சிறந்த நடிப்புக்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால்:

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது மாஸ்டர் நாக விஷாலுக்கு வழங்கப்பட்டது. தமிழில் ‘கே.டி என்ற கருப்புதுரை’ திரைப்படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மனோஜ் பாஜ்பாய், கங்கனா ரணாவத்துக்கு தேசிய விருது:

சிறந்த நடிகருக்கான தேசிய விருது இந்த ஆண்டு இருவருக்குக் கிடைத்தது. ஒருவர் நடிகர் தனுஷ். மற்றொருவர் ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய். ‘போன்ஸ்லே’ என்ற திரைப்படத்தில் கண்பத் போன்ஸ்லே என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதே போன்று ‘மணிகர்னிகா’, ‘பங்கா’ திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்டது.

x