ஜி.வி. சார் ரொம்பப் பொலைட்!


வர்ஷா பொல்லம்மா

சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ படத்தில் அறிமுகமானவர், பெங்களூருவைச் சேர்த வர்ஷா பொல்லம்மா. அகலமான கண்களால் ரசிகர்களை வசீகரிக்கும் இவரை, ‘96’ படத்தில் விஜய்சேதுபதியின் ஒளிப்பட மாணவியாகப் பார்த்து அசந்துபோனார்கள். அதன்பிறகு, விஜயின் ‘பிகில்’ படத்தில் வர்ஷாவுக்கு வலிமையான கதாபாத்திரம். தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளத்தில் தனக்கான இடத்தைக் கண்டடைந்திருக்கும் இந்தக் கன்னட அழகி, தற்போது ‘செல்ஃபி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்து முடித்திருக்கிறார். இது காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி:

உங்களது குடும்பப் பின்னணி விவரங்களை ரசிகர்களுக்குக் கொஞ்சம் பகிரலாமா?

கர்நாடகத்தின் குடகில் பிறந்தேன். குடகு தான் காவிரி தாயின் வீடு. காவிரியை குடகு மக்களாகிய நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். வர்ஷா என்றால் மழை. பொல்லம்மா எங்கள் குலதெய்மான வனதேவதையின் பெயர். எங்கள் குல தெய்வத்தின் பெயரையே குடும்பப் பெயராக வைத்திருக்கிறார்கள். எல்லா கூர்கீஸ்களுக்கும் இதுபோல் ஒரு ‘செகண்ட் நேம்’ இருக்கும்.

நான் படித்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில். பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முடித்திருக்கிறேன். எனக்கு ஒரு அண்ணன். அவருக்குத் திருமணமாகிவிட்டது. அன்பான அண்ணி. அப்பா காபி எஸ்டேட் நிர்வாகியாக பணியாற்றியவர். அம்மா இல்லத் தலைவி. இப்போது என்னுடைய தலைவியாகிவிட்டார். தன்னைப் பற்றி கவலைப்படாமல் எனக்காக கவலைப்படும் அவர், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என என்னுடன் படப்பிடிப்பு தலங்களுக்கு என் உற்ற துணையாகப் பயணிக்கிறார். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார். அம்மா... பொல்லம்மா எனும் எங்கள் குலதெய்வத்துக்கு மேல்.

அதனால்தான் உங்கள் கையில் ‘மா’ என்று பச்சை குத்தியிருக்கிறீர்களா?

மிகச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள். அம்மா - அப்பா அளவுக்கு நம்மால் சேக்ரிஃபைஸ் பண்ணமுடியாது அல்லவா? எனது அம்மாவைப் பெருமைப்படுத்த மட்டுமல்ல... உலகில் உள்ள அனைத்து அம்மாக்கள், இனி அம்மாவாகப் போகிறவர்கள் அனைவருக்காகவும் ‘மா’ எனப் பச்சை குத்திக்கொண்டேன். வாழ்க அம்மாக்கள்!

‘ஹச்சிகோ’ என்கிற உங்கள் செல்ல நாயை ‘தம்பி’ என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டிருக்கிறீர்களே..?

ஆமாம்! அவனுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. பள்ளியில் படிக்கும்போது ஹச்சிகோ என்கிற நாயைப் பற்றி உண்மைக் கதையைத் திரைப்படமாகப் பார்த்துவிட்டு, பல இரவுகள் தூக்கம் வரமால் அழுதுகொண்டிருந்தேன். அதன் அன்பு அப்படிப்பட்டது. தன்னுடைய எஜமானர் இறந்துவிட்டார் என்பது தெரியாமல், அவர் ஒருநாள் வந்துவிடுவார் என்று அவருக்காக ரயில் நிலையத்திலேயே தன் ஆயுள் முழுவதும் காத்திருந்து இறந்துபோனது ஹச்சிகோ. ஜப்பானின் சிபுயா ரயில் நிலையத்தில் அதற்கு அரசாங்கம் சிலையே வைத்திருக்கிறது. அந்த நாயின் நினைவாகவே எனது ‘தம்பி’க்கும் ஹச்சிகோ என்று பெயர் வைத்தேன். நிச்சயமாக ஒருநாள் ஜப்பானுக்குச் சென்று, ஹச்சிகோ படுத்திருந்த சிபுயா ரயில் நிலையத்திலிருந்து அதன் அன்பைச் சுமந்துகொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

சின்னச் சின்னக் கேரக்டர்கள்... பிறகு 2-வது ஹீரோயின் .. அப்புறம் சோலோ ஹீரோயின் என்று உயர்ந்திருக்கிறீர்கள். இந்தப் பயணம் உங்களுக்குக் கடினமாக இருந்ததா?

எந்தப் பின்னணியுமே இல்லாதவர்கள் சினிமாவில் படிப்படியாகத்தான் வளர முடியும். கடினமாக இருந்தது என்பதைவிட நிறைய கற்றுக்கொண்டேன். நல்ல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்து வளர்த்தது தமிழ் சினிமாதான். தமிழ் சினிமா உலகில், உணர்வுபூர்வமாக கனெக்ட் ஆகிவிடும் மனம் கொண்டவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். மலையாள சினிமாவில் வேலைக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். 20 நாளில் முழுப்படமும் முடிந்துவிடும். மரியாதை கொடுப்பதில் தெலுங்கு சினிமா உலகை அடித்துக்கொள்ள முடியாது. கடினமாக இருந்தது என்றாலும் 3 மொழிகளை எழுதப்படிக்கத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை, இந்தப் பயணம் எனக்குத் தந்திருக்கிறது.

‘96’ படத்தில் பார்வையாளர்களை ஏமாற்றிவிடும் அந்த கேரக்டரை ஏன் ஏற்று நடித்தீர்கள்?

அதை இயக்குநர் பிரேம் சாருக்காக ஒப்புக்கொண்டேன். ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ படத்தில் நானும் ஒரு ஹீரோயின். அதில் பிரேம் சார்தான் ஒளிப்பதிவாளர். அவர் “இதுவொரு ட்ரிக் கேரக்டர்தான்” என்று சொல்லியே என்னை நடிக்க வைத்தார். அந்தப் படம் எனக்குக் கொடுத்த ‘ரீச்’ வேற லெவல் என்பேன். இப்போதும் கூட,‘பிரபாவை ராம் கால்யாணம் பண்ணியிருக்கணும்’ என்று மீம்ஸ் வந்துகொண்டிருக்கிறது.

‘பிகில்’ படத்தில் வரும் அந்த மாட்டுப்பெண் கேரக்டருக்கு உங்களைத் தேர்வு செய்த காரணத்தை அட்லி சொன்னாரா?

ஒரு டிபிக்கல் பிராமின் கேர்ள் லுக் தேவைப்பட்டது என்றார். என்னுடைய கண்களில் கனவுகள் தேங்கிக் கிடக்கிற ஃபீல் இருக்கிறது என்றும் சொன்னார். அவர் சொன்னது உண்மை என்றே நினைக்கிறேன். இன்னும் நிறைய உயரங்களை அடைய வேண்டும் என்ற கனவு என்னிடமுள்ளது. ‘பிகில்’ படத்தின் காயத்ரி சுதர்ஷன் கேரக்டர், சான்ஸே இல்ல போங்க... ‘இனிமே எங்க பெண்ணை நாங்க மரியாதையா நடத்துவோம்’, ‘என்னோட மனைவியோட கனவு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு நிறைவேற்றுவேன்’ என்று படம் ரிலீஸ் ஆன சமயத்தில் எனக்கு மேசேஜ்கள் குவிந்தன. ஆயிரம் இருந்தாலும் ஒரு நல்ல கேரக்டர் பண்ணும்போது, அந்தப் படம் சக்சஸ் ஆகும்போது கிடைக்கிற பாராட்டுக்கு இணை எதுவுமில்லை!

இப்போது ஜி.வி.பிரகாஷ் உடன் ‘செல்ஃபி’ படம். எப்படி உணர்கிறீர்கள்?

இசை, நடிப்பு இரண்டிலுமே சாதிச்சிருக்கார் ஜி.வி.சார். ஸ்பாட்டில் அவ்வளவு பொலைட். எனக்கென்று இல்லை எல்லாருக்கும் ரொம்ப ஸ்வீட்டான பர்சன். நடிப்பு என வந்துவிட்டால் அசத்துகிறார். ‘செல்ஃபி’யில் நான் சோலோ ஹீரோயின். மாதவி என்னுடைய கேரக்டர் பெயர். இயக்குநரை பற்றியும் சொல்லவேண்டும். நாளைக்கு என்ன சீன்ஸ் எடுக்கிறோம் என்று முதல்நாளே சொல்லியிருப்பார். ஸ்பாட்டுக்கு வந்தால்... நாம் நினைத்ததைவிட அவர் எடுக்கும்விதம் அசத்தலாக இருக்கும். ‘செல்ஃபி’யை நானே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

x