நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல்!


’கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் மூலம் பிரபலமாகி, பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, ‘தமிழ்த் தேசிய புலிகள் கட்சி’யைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் மன்சூர் அலிகான், சமீபத்தில் உயிரிழந்த நடிகர் விவேக் குறித்துப் பேசியும் சர்ச்சையில் சிக்கினார். கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக் இறந்தாக, மன்சூர் அலிகான் தெரிவித்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்துவரும் மன்சூர்அலிகானுக்கு, சென்னையில் பல்வேறு பகுதிகளில் சொந்தமாக வீடுகள் உள்ளன. அதேபோல் சூளைமேடு, மேற்கு பெரியார் பாதை பகுதியிலும் 2,500 சதுர அடியில் இவருக்கு சொந்தமான வீடு ஒன்றுள்ளது. இந்த இடத்தை, கடந்த 2000 ஆண்டு அப்பாவு என்பவரிடம் இருந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சூளைமேட்டில் உள்ள இந்த 2,500 சதுர அடி நிலம், அரசு புறம்போக்கு இடம் என்று பிரச்சினை கிளம்பியது. அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து நடிகர் மன்சூர்அலிகான் வீடு கட்டியிருப்பதாக, 2019-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததையடுத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று அவரது சூளைமேடு வீட்டுக்கு சீல் வைத்தனர்.

சீல் வைக்கப்பட்ட தகவல் அறிந்து மன்சூர்அலிகான் தனது அண்ணன் ஷெரிப்பை அங்கு அனுப்பி, மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட வீட்டின் முன் சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தினார். இதன் மூலம், சீல் வைத்த அறிவிப்புப் பலகையையும் மூடி மறைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் மன்சூர் அலிகாகின் சகோதரர் ஷெரிஃப்,

”தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை நடிகர் மன்சூர் அலிகான் 2000-ல் அப்பாவு என்பவரிடம் கொடுத்து, இந்த இடத்தை வாங்கி வீட்டைக் கட்டினர். ஆனால், திடீரென இந்த இடம் அரசுப் புறம்போக்கு நிலம் எனக்கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், சொல்லுங்கள்? இதே சர்வே எண்ணில் இப்பகுதியில் உள்ள மற்ற கட்டிடத்திற்கு ஏன் சீல் வைக்கவில்லை?” என கேள்விகளை எழுப்பினார். அதேநேரம் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்தப்படுகிறதா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். அரசும், நீதிமன்றமும் எதைச் செய்தாலும் அதை நியாயமான முறையில் செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2012-ல், வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனது இடத்தை நடிகர் மன்சூர்அலிகான் ஆக்கிரமித்துக் கொண்டதாக, குணசேகர் என்பவர் அப்போதைய காவல் ஆணையர் திரிபாதியிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

x