தீபாவளிக்கு எதிரான விளம்பரம்: அமீர்கானுக்கு எதிராகக் குவியும் கண்டனங்கள்


நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு டயர் தயாரிக்கும் நிறுவனமொன்று. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரப் படத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் தெருவில் விளையாடும் சிறுவர்களை அழைத்து அமீர்கான் 'சாலைகள் பட்டாசு வெடிப்பதற்கானது அல்ல, சாலைகள் வாகனங்களுக்காக' என்று அறிவுரை சொல்கிறார்.

இந்த விளம்பரம் இந்துக்களின் தீபாவளி பண்டிகைக்கும், அவர்களது நம்பிக்கைக்கும் எதிரானது. இதில், இஸ்லாமியரான அமீர்கான் நடிக்க வைக்கப்பட்டதன் உள்நோக்கம் என்ன என்று கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, குறிப்பிட்ட டயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “சமீபத்தில் அமீர்கான் தெருக்களில் பட்டாசு வெடிப்பது குறித்து அறிவுரை வழங்கும் உங்கள் விளம்பரத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. பொதுமக்களின் பிரச்சினைகள் மீதான உங்கள் அக்கறைக்குப் பாராட்டுகள். ஆனால், இதேபோல சாலைகளில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னொரு பிரச்சினையையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது, வெள்ளிக்கிழமை மற்றும் இதர விழா நாட்களில் தொழுகையின் பெயரில் முஸ்லிம்களால் சாலைகள் மறிக்கப்படுவது.

பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை நீங்கள் உணர்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்துக்களுக்கு எதிரான நடிகர்கள் குழு ஒன்று எப்போதும் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் சமூகத்தில் இருக்கும் தவறுகளைப் பற்றிப் பேசுவதில்லை" இவ்வாறு அனந்த்குமார் ஹெக்டே கூறியுள்ளார்.

x